Sep 29, 2013

எம்பித்ரி

இசை என் மூச்சு.

பள்ளி நாட்கள் தொட்டு எனக்கு சாவித்திரி ,காயத்ரி போன்றவர்களைவிட எம்பித்ரி மிகவும் பிடித்திருந்தது. என் வாழ்வின் ஜீவாதாரம், இரண்டாம் தாரம் எல்லாம் இந்த எம்பித்ரி. இசை !

இசையை பொறுத்த வரையில்  நான் வடிவேலு மாதிரி. ரொம்ப நல்லவன். எவ்வளவு போட்டாலும் கேட்பேன்.என்ன போட்டாலும் கேட்பேன். இளையராஜா, யானி, கென்னிஜி, பால்மரியாட், கலித், ரகுமான், இமான், கிப்ரன் ,எம்.ஜெயச்சந்திரன் மலையாளம்,கர்நாடிக், கஜல், ஆப்ரிக்கன்,வெஸ்டர்ன் இன்ஸ்ட்ருமெண்டல்...இன்னும் என்ன? சுருக்கமாக, நான் ஒரு இன்ஸ்ட்ரு”மெண்டல்” என்று வைத்துக்கொள்ளுங்களேன்!

தினமும் கடைக்கு போய் புதிதாக சிடி வாங்கி கேட்பது என்னால் ஆகாத காரியம். அப்படியே போனாலும்,அங்கெ கொட்டிக்கிடக்கும் நர்சரி ரைம்ஸ் மற்றும் எண்ணற்ற பக்தி mp3 சிடிக்களின்  நடுவே எனக்கு பிடித்த இசையை தேடுவது என்பது இயலாத ஒன்று. மேலும், என் போன்ற ‘உலக இசை’ விரும்பிகள்  தேடும் இசை கடைவீதிகளில்  கிடைக்கவும் வாய்ப்பில்லை.கிடைக்கும் சில சிடிக்கள் ‘ஒருமாத மளிகை சாமான்’ விலை போட்டிருக்கும். மருந்துக்கு ஓரிரண்டு சிடிக்களை நான் கடைகளில் வாங்கினாலும் ,பெரும்பாலும்  நான் இசைக்கு நம்புவது  இணையம் ஒன்றே.

இணையத்தில் இதுவரை யாரும் என்னளவுக்கு mp3 டவுன்லோட் செய்திருக்கிறீர்களா ? இருக்காது. இத்துறையில் பல வருட அனுபவம் உள்ள எனக்கு M.A.MP3 என்று பட்டம் கூட போட்டுக்கொள்ள முழு தகுதி உண்டு. நான் டவுன்லோட் செய்த பிராட்பேன்ட் பைசாவில் இந்நேரம் ECR-ரில் 2BHK அபார்ட்மென்ட் ஒன்றே வாங்கி இருக்கலாம்.

எம்பித்ரி டவுன்லோட் செய்வது ஒரு கலை. நான் படித்த இந்த முதுகலை படிப்பு நாட்டுமக்களுக்கும் பயனாக , இதோ என் அனுபவங்கள் ...மற்றும் ...அனுபவத்தால் தரும் அறிவுரைகள்.

ஒரு தேர்ந்த எம்பித்ரியனுக்கு (இனி , எம்பித்ரியன் = ‘MP3 download செய்பவன்’) முதலில் தேவை பொறுமை.

முதலில், Download “Helmut Zacharias“ mp3 (ஜெர்மனி,வயலின்) என்று கூகிளில் அடித்ததும்.பைல் ட்யூப்,எம்பித்ரி ஜூஸ் ,எம்பித்ரி ஸ்கல் என்று ஆயிரம் லிங்குகள் வந்து விழும்.

கபர்தார் .

பெரும்பாலும் முதல் பக்கத்தில் உள்ளவை ஒபனிங் எல்லாம் சரியாக இருந்தாலும் ,பினிஷிங் சரியாய் இராது .பெரும்பாலும் இவை துட்டு  கேட்கும் பக்கங்கள். அமேசான்.காம்  போன்ற ஆத்மாக்கள் டாலரில் பேசுவார்கள் .ஜஸ்ட் பதினாறு  டாலர் என்பான். நாம், ரகுராம்ராஜனை நெஞ்சில் வணங்கி அறுபது முதல் எழுவது வரை உத்தேசமாக  பெருக்கி பார்த்து அதிர்ச்சி அடைய நேரிடலாம். உத்தேசமாக பதினாறு டாலர் சிடி என்பது ஒரு ஆயிரம் ரூபாய்.பதினாறு டாலர் என்னால் முடியாது. அய்யா... என்னிடம் உள்ளது திருப்பதி ‘ஏடுகொண்டலவாடா’ டாலர் மட்டுமே. எனக்கு கட்டாது. எனவே , நேராக நான் இரண்டாம் பக்கம் போகிறேன்.

இங்கே ,லிங்குகளை கிளிக்கினால்  You are only few clicks away from download” என்று சொல்பவன் கடைசியில் உங்கள் கோத்ரம், நட்சத்திரம், மச்சம், கிரெடிட்கார்ட் நம்பர்  எல்லாமே கேட்பான். இவனை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நன்று. நேர விரயம்.

MP3 டவுன்லோட் என்பது  சற்றே அபாயகரமானது . வைரஸ் பரப்பும் வலைதளங்கள் இங்கு நிறைய உண்டு. குறிப்பாக   .pk என்று முடியும் பாகிஸ்தான் நாட்டு வலைதளத்தை கிளிக்கினால் உங்கள் கம்ப்யூட்டர் pk. ..அதாவது, ‘பூட்டகேஸ்’ என்று அர்த்தம். வேண்டாம் !

இத்துறை வல்லுனர்களுக்கு மட்டுமே  தெரியும், ‘எது எங்கே பாதுகாப்பாக கிடைக்கும்’ என்று.

”உனக்கு தமிழ் பாட்டு வேண்டுமா? இங்கே போய்ப்பார். மலையாளமா(பாட்டுதான் சார்)அங்கே போ ... இன்ஸ்ருமெண்டலா கர்னாடிக்கா  வெஸ்டர்னா, உலக இசைக்கு  ..இங்கே போய் கிளிக்கு ” .’பாய்ஸ் ’ படத்தில் செந்தில் சொல்வது மாதிரி ‘Information is wealth’! நல்ல நம்பகமான வலைத்தளங்களை கண்டுபிடித்தவுடன் ரக வாரியாக புக் மார்க் செய்வது ஒரு தேர்ந்த ‘எம்பித்ரீயன்’ படிக்கும் பாலபாடம்.

சில வலை தளங்கள் பாடலை இறக்கும் முன், ‘நீ மனிதனா மிருகமா’ என்று அறிய கீழே உள்ள நம்பரை டைப் செய் என்று பணிக்கும். செய்யலாம். உங்களுக்கு அந்த  சந்தேகம் இல்லாவிடினும் , நீங்கள் நம்பரை அடித்தால்தான் ஆச்சு.

நீ ‘ப்ரீயா ...துட்டு பார்ட்டியா’ என்று கேட்பவை சில. எனக்கு வெகு நாட்களாக சந்தேகம். ப்ரீமியம், ப்ரீ என்று இரண்டு ஆப்ஷனில் எந்த கூமுட்டை ப்ரீமியத்தில் போய் இருபது டாலர் பணம் கட்டுவான் ? நான் வைத்திருப்பதோ இந்த மொக்கை பிராட்பேண்ட். இதில் எதுக்குடா faster download எனக்கு ?? சரக்கு, மினரல் வாட்டர் , இட்லி முதற்கொண்டு எல்லாமே மலிவாய் கிடைக்கும், பொன் விளையும் பூமியில் பிறந்தவன் நான். எனக்கு ப்ரீ போதும் . என்ன ஒரு சிக்கல் ? ப்ரீ டவுன்லோடிற்க்கு ‘இருபது செகண்ட் ’ காத்திருக்க சொல்லுவான். எம்பித்ரி கேட்பவன் இன்சாட்-1B ஒன்றும் ஏவப்போவதில்லை . காத்திருக்கிறேன். I am waiting.

புதிதாக MP3 தொழில் துவங்குபவர்கள் முன்பின் தெரியாத லிங்குகளை க்ளிக்கும்போது அதிர்ச்சி அடைய வாய்ப்புண்டு.சில லிங்குகள் க்ளிக்கியவுடன்,உங்களுக்கு மறுகல்யணத்தில் ஆர்வம் உண்டா என்றெல்லாம் விசாரிக்காது உங்களை  “ பாரத் மேட்ரிமோனியல் அல்லது ஷாதி டாட். காம்கூட்டிக்கொண்டு போகும். ! சில வலைதளங்கள் க்ளிக்கியபின் எம்பித்ரி –க்கு பதில் எம்ப்டி’யாகவும் இருக்கும். டொமைன் பார் சேல் அல்லது பைல் நாட் அவைலபல் அல்லது  ‘மாமா பிஸ்கோத்து’ என்று பல் இளிக்கும். மனம் தளரவேண்டாம்.

முக்கியமாக,சில  எம்பித்ரி பக்கங்களில் “கங்க்ராட்ஸ்” என்று உங்களை பாராட்டி ஒரு ஸ்மைலியுடன் பாப்-அப்பைஅன்புடன் அனுப்புவார் ஒரு புண்ணியவான்  . “யு  ஹேவ் வோன் டென் மில்லியன் டாலர்  லக்கி ப்ரைஸ்”... அவ்வ்வ்வ்...யார் கிட்ட ??? நீங்கள் க்ளோஸ் என்ற X -சை என்ன அமுக்கினாலும் க்ளோஸ் ஆகாது அந்த விண்டோ. நீங்கள் இந்த  விபரீதத்தை என்ன செய்வது என்று பேந்தபேந்த முழித்துக்கொண்டிருக்கும்போது , அந்த கங்க்ராட்ஸ் லாட்டரி விண்டோ உங்கள்  ஸ்க்ரீனில் நர்த்தனம் ஆடத்துவங்கும் .கீழிருந்து மேலும் வலமிருந்து இடமும் பாயும் அந்த லாட்டரி விண்டோவை  நீங்கள் துரத்தி துரத்தி சென்று க்ளோஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும். இந்த லாட்டரி வெப்சைட்டுகளை தவிர்ப்பது நன்று..

அப்புறம் , முக்கியமாக எம்பித்ரி டவுன்லோட் செய்யும்போது வீட்டில் யாரும் பின்னால் உள்ளனரா என்று ஒருமுறை  பார்த்துக்கொள்வது உசிதம். இப்படிதான் ஒருமுறை...நான் ஒரு லிங்கை க்ளிக்கியபோது “சமீரா இஸ் வெய்ட்டிங் பார் யு” என்று ஒரு அம்மணி ‘டூ பீஸில்’ திடீரென்று ஸ்க்ரீனில் வந்து ‘பப்பறப்பே’ என்று நிற்கிறாள் ! டூ யு வான சேட் வித் மீ?? எனக்கு பொறி கலங்கி போனது. இன்னும் சிலதுகள், டூ யு வான்ட் ரெலேஷன்ஷிப் வித் ஜூலி ? என்று மெல்ல ஸ்க்ரீன் கீழே வந்து நோட்டம் விடும். என்ன மாதிரி ரிலேஷன்?’  என்றெல்லாம் ஜொள்’ளாமல் உடனே விண்டோவை க்ளோஸ் செய்வது உசிதம். வண்ண மயமான மீன்கள் துள்ளி விளையாடும் “ப்ரீ ஸ்க்ரீன் சேவர்” பாப்பப்புகள் நிறைய உண்டு. இது வெறும் பாப்பப் அல்ல. உங்கள் கம்ப்யூட்டருக்கு வைக்கும் பாப் ‘ஆப்பு’ . இதற்கெல்லாம் ஆசைப்படக்கூடாது பாலகுமாரா !

அப்புறம், இணையத்தில் ,டோர்ரன்ட் என்றொரு கும்பல் உண்டு. இது தாலிபான் ரகம். சற்றே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். Seeders, Peers, Trackers என இதற்கென்று ஒரு அகராதியே உண்டு. இதை ஒரு ‘Full-Time கோர்ஸாக’ திறந்தவெளி பல்கலைகழகத்தில் படித்து முடிக்க ஒரு மாதகாலம் ஆகலாம். இது ஒரு தேர்ந்த எம்பித்ரியன் போகும் கடைசி நிலை. முதுகலை மாணவர்களுக்கானது. முன்பின் தெரியாத ‘mp3 பள்ளி சிறுவர்கள்’ டோர்ரென்ட் பக்கம் போக ஆசைப்பட்டால் உங்கள் கம்பூட்டரை  இஷ்ட தெய்வத்திற்கு நேர்ந்து விட்டப்புறம் போவது நல்லது.ஆனால், ரிஸ்க் vs ரிவார்ட் ரேஷியோ இங்கு பொருந்தும். கிடைப்பதற்கு அரிய  பல சிறந்த ‘வேர்ல்ட் பெஸ்ட்’ மியூசிக் ஆல்பங்கள் இங்கு லட்டு மாதிரி கிடைக்கும்.

சரி...

ஆயிரம் சொல்லுங்கள் ...இந்த இன்டர்நெட் ஒரு பெரிய புரட்சிதான். ரஜினி  பாட்டுக்கு ஜப்பானில் ஆடுகிறார்கள். ரகுமான் பாட்டை அமெரிக்கன் பாடுகிறான் . கும்பகோணம் கோவாலு ஆப்ரிக்கா,அரேபிக்,வெஸ்டர்ன்  மியூசிக்கெல்லாம்  கேட்கிறான். இசையை பொருத்தவரைக்கும் எல்லா எல்லைகளும் உடைந்து போய் உலகம் ஒன்றானது இண்டர்நெட்டால்தான்..

வாழ்க இணையம்!

எல்லாம் சரி....

பைரசி தப்பில்லையா ?

‘நாலு பேர் பாட்டு கேக்கறான்னா எதுவுமே தப்பு இல்லை’  

Allowance is made for "fair use". அப்படின்னு சில உத்தம வெப்சைட்’டுகள் தவறை நியாயப்படுத்தும் தமாஷான டிஸ்க்ளைமர் இதோ ...

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976. All the songs at Xyz.Com are for listening purposes only. Making duplicate Audio CD's from MP3 files is illegal. Allowance is made for "fair use". Therefore please kindly support us by buying original version of Audio CD's from your local retailer.

நல்லா இருக்குய்யா... நீ அழகா Zip file பண்ணி Download MP3 அப்படின்னு போட்டப்புறம் , கடைக்கு போய் நானூறு ஐநூறு  கொடுத்து ஒரிஜினல் சிடி எதுக்கய்யா வாங்கப்போறோம்? வாங்கி  கையில வெச்சிண்டு மகாவிஷ்ணு மாதிரி சுத்திகிட்டு நிக்கவா ???

அவ்வவ்வ்வ்....

 “Your File is Downloading.....”

I am ... Waiting.

 

 

 

 

No comments:

Post a Comment