Mar 28, 2013

சைக்கோ ஆக்கிய சண்டாளன்


இடது முழங்கைக்கு பின் சென்று ,அந்த பறவை நைசாக மூக்கை என் உடம்புக்குள் நுழைத்தபோது எனக்கு சுரீர் என்று வலித்தது.கையை சொறிந்துகொண்டு என் ஆஸ்தான ஈஸி சேரில் உட்கார்ந்தபடி, மீண்டும் நான் லேப்டாப்’பில் மூழ்கினேன். சற்று நேரத்தில் ,கணுக்கால் அருகே அரிப்பு. எட்டிப்பார்த்தால், மீண்டும் அவன். எப்படி என் கை போகமுடியாத இடம் இவனுக்கு தெரிகிறது ? ச்சூ போ....என்று விரட்டிவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தேன்.
“அப்பாடா..ஆளைக்காணோம்..” .
நிம்மதி பெருமூச்சு விட்டு இரண்டு நிமிடம்தான் ஆகிறது. அங்கே மூன்று நான்கு பேர் விர்ர்..என்று விருமாண்டி போல வெறியோடு  என் காலை சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.ம்ம்ம்...போய் குடும்பத்தை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான். ஏண்டா, உன் வீக் எண்ட் அவுட்டிங்குக்கு, நான் என்ன சரவணபவனா? விட்டால், ரத்தம் கூட ,கெட்டி சட்னி கேட்பாயா?  என்னை கொஞ்சம் வேலையை செய்ய விடுகிறாயா மாபாதகா ?
அவன் விடுவதாயில்லை.
வெறுத்து ,லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, ”வாங்கடா  &*^%#@!” என்று என் கையை தேய்த்துக்கொண்டு குனிந்தேன். என்ன ஆச்சர்யம்?இரண்டு நிமிடங்கள் ஆகியும் ...படவா..ஒருத்தனை கூட காணோம்.
 ‘ரைட்டு விடு ..’ என்று,மீண்டும் வேலையை தொடர... இதோ ஈனப்பயலின் கொயிங்ங்’காரம் மீண்டும் .....ஸ்க்ரீன் முன்னாலே, ஒய்யராமாக பறந்து போனது ஒரு மிக் விமானம். இருடா வருகிறேன்...எடு அந்த சீனா பேட்டை....தோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட்’டேல்லாம் அடித்து பார்த்தேன்.ஒருத்தன் கூட சிக்கமாட்டேங்கறானே??
பட்பட்ட்..பட பட்...
யாரையும்  காணோம். ஒரே ஒருத்தன் மட்டும் உயிர் துறந்து கிர்ர் என்று தரையில் சுத்திக்கொண்டிருந்தான்.மீதி பேர் எங்கேடா?? “அந்த பயம் இருக்கட்டும்” என்று எனக்கு நானே சொல்லிகொண்டு, பேட்டை கீழே வைத்தேன். மறு நிமிஷம்.....,”ஹலோ சார், கொஞ்சம் ப்ளட் இருக்குமா?” என்றபடி மூன்று  பேர் ஒய்யாரமாக என் காலை வட்டமிட்டனர். வெளியே இருவரை  காவலுக்கு நிறுத்தி விட்டு,மூன்றாமவன் லுங்கிக்கு உள்ளே போய் கொஞ்சமும் பயப்படாமல் , என் தொடைக்கு கீழ் பக்கம் போய்  தோதாய் இடம் பார்த்து, “X” மார்க் போட்டு,  நங்கூரம் பாய்ச்சினான். அலறிய நான், குலுங்கி எழ ,லேப்டாப் கீழே விழத்தெரிந்து,ஒரு வழியாக கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.
ச்சே!
ஹாலை விட்டு எழுந்து போய் ,என் ஆஸ்தான டேபிளில் சென்று அமர்ந்தேன் .லேப்டாப்பை விரித்து பத்து நிமிஷம் ஆனது.மீண்டும் காலை சுற்றி பன்னாடைகள்.காலை “வைப்ரஷன் மோடி”ல் போட்டது போல் ஆட்டிக்கொண்டே வேலையை தொடர்ந்தேன்.சற்று அசதியில் காலை ஆட்டுவதை நிறுத்தினால், மீண்டும் ரத்ததானம். ச்சே ! அந்த காலத்தில் முனிவர்கள் அசையாமல் வெட்டவெளியில் எப்படி தவம் செய்தார்கள்?
என்ன கொடுமை இது?
என் போன்ற சோம்பேறிகளை வீட்டில் எப்போதும் கை கால் அசைத்தபடி இருக்கச்செய்யும் ‘பிட்னெஸ் ட்ரைனர்’ இவன். இவனுக்கு பயந்து வீடு முழுக்க வலை அடித்தாயிற்று. வலை போடும் நைலானில் பைஜாமா கிடைக்குமா என்றுகூட விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.

“கதவை திற..காற்று வரும்” ..கேட்க நன்றாக இருக்கும்..காற்று எங்கே வருகிறது?.இந்த கம்மனாட்டி’தான் வருகிறான். எனவே வாசல்  கதவை நானும் திறப்பதே இல்லை.சென்னையில் பாதி அபார்ட்மென்ட்களில் யாரும் பக்கத்து வீட்டுக்காரர்களோடு பழகாமல் இருப்பதற்கு இந்த சண்டாளனும் ஒரு  காரணம். இரவு படுக்கும்முன் வலை போடும் வேலை இருக்கிறதே...அய்யகோ! தூங்கும் ஆசையே  ,இதனால் நின்றுவிடும். ஒரு வழியாக கட்டிலை சுற்றிலும் வலை பின்னி,அக்கடா என்று படுத்தால், வலைக்கு வெளியிலிருந்தபடி ஆதரவு தரும்வகையில்,மூக்கை மட்டும் என் கைக்குள் செலுத்தி பாஸ்ட் புட் மாதிரி ரத்தம் கொரிக்கிறான். இதைவிட கொடுமை, இன்று காலையில் ஷேவ் செய்யும்போது, காலில் வெடுக். ஆத்திரத்தில் நான் குனிய,மீசை ஒரு பக்கம் குறைந்தது ! வெறியோடு கத்தினேன்..” டேய்..நீ நிஜமான ஆம்பிளையாய் இருந்தால் ஒண்டிக்கொண்டி வாடா...எவ்வளவு ரத்தம் குடிப்பாய் ? உனக்கு டயட் ஏதும் இல்லையா? குண்டா.!! போய்,காலங்காத்தால ”ஆர்பிட்ரக் எலைட்” பண்ணேன்டா..என் கோவம் உச்ச நிலை அடைந்தது. ஒரு காலை இன்னொரு காலால் சொறிந்தபடி டான்ஸ் ஆடிக்கொண்டே ஒருவழியாக ஷேவ் பண்ணி முடித்தேன்.அடுத்த காலில் வேறொருவன் கடித்ததால், இரு பக்க மீசையும் சமமானது சற்றே சந்தோஷம்.
முடியவில்லை...இந்த பன்னாடைகளை விரட்ட நான் எடுத்த எல்லா முயற்சியும் இதுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்த வத்தி சுருள்?பைசா பிரயோஜனமில்லை சார்.வெறுமனே சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி மாதிரி புகை மட்டுமே வெளிவிடுகிறது. நமக்கு இருமல் மட்டுமே மிச்சம்.அந்த ராட்சசனோ, தலைக்கு குளித்துவிட்டு சாம்பிராணி போட்டு விடுவது போல ,அந்த புகைக்கூட்டத்துக்குள் ஒய்யாரமாக வலம் வருகிறான். அடுத்து,ஆல் அவுட் .இந்த கெமிகல் வேப்பருக்கு “ஆள்” மட்டுமே அவுட். இதோ ,தனது  கனத்த பின் பக்கத்தை தூக்கி காட்டியபடி,ஆல் அவுட் விளக்கின் மேலேயே படுத்து ‘சன்  பாத்’ எடுத்துக்கொண்டிருக்கிறான் ஈனப்பயல்.உண்ட களைப்பு இந்த குண்டனுக்கும் உண்டு. ஓடோமாஸ் போன்ற கிரீம்களை தேய்த்து தேய்த்து தோல் உரிந்தது மற்றொரு சோகக்கதை.சைனா பேட் “டப டப்” என்று சத்தம் மட்டுமே.சென்னையில் பாதி பேர் இரவு நேரங்களில் ரோஜர் பெடரர் ,நாடல், லியாண்டர் பயஸ் மாதிரி ஓடி ஓடி அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.மாட்சை கடைசியில்”நேர் செட்”டுகளில் ஜெயிப்பது என்னவோ இந்த குட்டிப்பிசாசுகள்தான்.ஒரு வாரம் கழித்து இந்த சீனா பேட்டும் ஒரே ஒரு ஒயர் விட்டுப்போய், ”புர்ர்ர்....ர்” என்று பல்லிளிக்கிறது.ஒன்றும் பயனில்லை ! கடன்காரன்!! இவனிடமிருந்து என்று நமக்கு விடுதலை கிடைக்கும்?
குழந்தைகள்,முதியோர்,நோயாளி என்று ஆள் கூட  பார்க்காமல்  ரத்தம் உறிஞ்சும் இந்த சுயநலப்பேய். அவன் பெயரை கூட உச்சரிக்க எனக்கு பிடிக்கவில்லை. சரி..மூன்று பக்கம் புலம்பியாயிற்று. முடித்துகொள்கிறேன்.
உடைந்த ஓட்டை பக்கெட்டில் அழுக்கு தண்ணி, பழைய பால் கவர் போட்ட டப்பா (இந்த ஆவின் பால் கவர் வாசனை கூட இவனை ஒண்ணும் பண்ணவில்லையே? L), ,திறந்த குப்பைத்தொட்டி,சாக்கடை  என்று வசதி பண்ணி தருபவர்கள் இருக்கும் வரை இவன் பாடு உஜாலா’தான். பகல் முழுதும் முத்தம்;இரவில் ரத்தம்.ஒன்று நூறாகி,ஆயிரம்,லட்சம்,கோடி எல்லாம் தாண்டி 2G ஊழல் நம்பர் மாதிரி வளர்ந்துகிடக்கிறது  இவன்  இனம். “சிடிசன்” பட  அத்திப்பட்டு கிராமம் அழிந்த கதை மாதிரி, இவர்களை பூண்டோடு அழிக்க என்ன வழி??
சயின்டிஸ்ட் மகான்களே...இன்சாட் செயற்கை கோள்,அணு குண்டு ,கேன்சருக்கு மருந்து எல்லாம் கண்டுபிடித்தாயிற்று .இன்னும் இவனை ஒழிக்க ஒரு வழி இல்லை.
இதோ, இந்த பேமானி கசமாலம் கய்தை கடங்காரன்  ஈனப்பய எச்சக்கல  .etc etc வை.. ... -ஒழிக்க ஒரு வழி ??
உண்டு!
ராஜமௌலி சார் மாதிரி, “நான் கொசு” என்று கொசுவாகவே மாறி, மற்ற எல்லாக் கொசுக்களையும் நானே அழித்தால் என்ன??.
 
 
 
 
வெறுப்பு...கோபம்....காழ்ப்புணர்ச்சி...பகை...பழிக்கு பழி !!
வாங்கடா ,வாங்க !!
கொய்ங்ங்......
“கொசுடா...கொசுடா...கொசுடா.....பாக்க நானும் பசுடா....
உன்ன கொல்லப்போறேன்... உன்ன கொல்லப்போறேன்”
 
தலைப்பிற்கான  காரணம் உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கலாம்  !
****************************************************************************************************************

 

*கொசு’று:    படித்தது....

சிங்கத்தை  வலை விரித்து பிடிக்கும் இவன்
கொசுவிற்கு பயந்து வலைக்குள் ஒளிகிறான் !!