Oct 24, 2012

கொலுமேனியா

வருடம் முழுவதும் வாழ்க்கையில் வரும் எல்லா சோதனைகளையும் தாங்கும் சக்தி எனக்கு எங்கிருந்து வந்தது?
 
நவராத்திரி கொலு !
அந்த ஒம்பது நாட்கள்,நான் நொந்த ஒம்பது நாட்கள்.
எனக்கு இந்த பண்டிகைகள்,கும்பல்,வெளியில் சுற்றுவது எல்லாமே சற்று அலர்ஜி சார்.ஒரு நாள் லீவு கிடைத்தால், அக்கடாவென்று வீட்டில் ஈஸி சேரில் உக்கார்ந்து இளையராஜாவை கேட்டுக்கொண்டு இனிமையாக பொழுதை கழிப்பது, Facebook/Twitter என்று லேப்டாப்பை நோண்டுவது,டிவியில் ‘அனிமல்பிளானட்’ பார்ப்பது,மதியம் உணவு முடித்து, தவறாமல் ஒரு கும்பகர்ண தூக்கம் போடுவது போன்றவை என் சமுதாய கடமைகளில் சில.
அக்டோபர் மாதம் வந்தது இந்த கொலு. என் விடுமுறை ஜாலி, காலி.
இம்முறை, மனைவி மாம்பலம் போய் வாங்கி வந்திருக்கும்  சில பல குட்டி குட்டி பிளாஸ்டிக் சமாச்சாரங்கள், இன்னும் சற்று நாட்களில் வீசப்போகும் கொலு புயலுக்கான முன் எச்சரிக்கையாக எனக்கு உணர்த்தின.ப்ளவுஸ்  பிட்,பழம்,வெத்திலை,பாக்கு, புதிதாக சில பொம்மை செட்டுகள்,குழந்தைகளுக்கு கொடுக்க ஜிமிக்கி,தோடு,செயின் மற்றும்  பிளாஸ்டிக் ட்ரே,குங்கும சந்தன குமிழ்கள் etc etc என்று ஒரு வால்மார்ட்டையே வாங்கி குவித்து, முழு ஜோரில் அவள் நவராத்திரிக்கு தயாராகிவிட்டாள்.இனி, வீட்டில் ஒம்பது நாள் என் சுதந்திரம்?
கொலுவுக்கு முன் தினம் ஆபீசிலிருந்து வீடு திரும்பிவந்து பார்த்தால், என் ஆஸ்தான ஈஸிசேரை காணோம்.மடக்கி எங்கோ மூலையில் சொருகி வைக்கப்பட்டது, என் மனதுக்கு வலித்தது. ஹால் நடுவில் இருந்த என் ‘சேட்டு’ சோபா செட் நகர்த்தப்பட்டு, இனி ஒம்பது நாட்களுக்கு டிவி இல்லை என்பதை தெரிவித்தது.பரண் மேல் இருந்த பத்து அட்டை பெட்டிகள் என்னை பார்த்து சிரித்தன. மேலே பரணை பார்த்தபடி,மனைவி சொன்னாள்.
“கொஞ்சம் பொம்மை அட்டை பெட்டிகளையெல்லாம் இறக்கி தாங்க”
சரி...இன்று போர்ட்டர் உத்தியோகம்தான்.ஸ்டூலில் ஏறி பார்த்தால், ‘கொஞ்சம்’ பொம்மை இல்லை.நிறைய.சென்னையில் மற்றவர்கள் வீட்டில் வைக்க பொம்மை இருக்குமா என்ற ஐயத்துடன் பெட்டிகள் அனைத்தையும் இறக்கினேன்.
“அப்படியே அந்த கொலு படி ஸ்டீல் ப்ளேட்,ஆங்கிள்,போல்ட் நட்,மனை,லொட்டு,லொசுக்கு எல்லாத்தையும் எடுங்க”
எப்பவுமே முழு “Job Scope”-ஐ சொல்லாத நல்ல HR Manager அவள். வேலையில் இறங்கிய பின், “அப்படியே அதையும்” என்று பல வேலைகளை சேர்த்து தரும் திறமைசாலி. எல்லாவற்றையும் கூலி இல்லாது இறக்கி கொடுத்தேன். நல்ல வேளை ! நான் “போல்ட் நட்”டுகளை சரியாக முடுக்க மாட்டேன் என்ற அவள் ஐயம் காரணமாக,  கொலுப்படி அமைக்கும் பொறுப்பு Outsource செய்யப்பட்டிருந்தது. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஜேக்கப் என்னும் ப்ளம்பர் வந்து ஸ்டீல் பிளேட்டுகளை இணைத்து படி அமைத்து,விழாவினை துவக்கி வைத்தார்.வீடு முழுவதும் அட்டைபெட்டிகள் பிரிக்கப்பட்டு கொலு பொம்மைகள் ஒவ்வொன்றாக படி ஏறின.ஹால் முழுவதும் ஆக்கிரமித்து, பிரம்மாண்டமாக டி.ராஜேந்தர் பட செட் மாதிரி கொலு அரங்கேற்றம் ஆரம்பமானது.பேசாமல் நானும் ஒரு படியில் போய் ஒம்பது நாட்கள் உக்காந்துவிடலாமா என்று யோசித்தேன்.ஹாலில் பாக்கி இருந்த கொஞ்ச இடத்தில் என் செல்ல மகள், மணலை கொட்டி, “அப்பா,இது பார்க் செட்” என்றாள். குட்டி குட்டியாக பெஞ்ச்,சேர்,பிளாஸ்டிக் புல்வெளி,விலங்குகள்,வாகனங்கள் என்று அவள் தனியாக ஒரு கட்சி துவங்கி, ஒரு ’மினி கொலு’ ஆரம்பித்திருந்தாள்.பார்க்க அழகாகத்தான் இருந்தது. என் வீட்டு ஹால் இவ்வளவு அழகாக நான் பார்த்ததே இல்லையே?சரி, டிவி இல்லாவிட்டால் என்ன?நமக்கு நம் ரூம்தான்  கதி.நாம் உண்டு நம் Laptop உண்டு. சிவனே என்று கிடப்போம் என்று நினைத்தபடி அங்கே என் ரூமுக்கு போய் பார்த்தால்.....அங்கு பெரிய அநியாயம் இழைக்கப்படிருந்தது.
ஹால் இவ்வளவு சுத்தமாக இருந்ததிற்கு காரணம், அங்குள்ள அனைத்து சாமான்களும் என் ரூமிற்கு வந்ததே! என் ரூம் ஓர் தற்காலிக              “கோடோவ்னாக” மாற்றப்பட்டிருந்தது. ஓட்டை ஒடசல் பழைய சேர், நான் வாங்கி இரண்டு முறை மட்டுமே பயன்படுத்திய Orbitek Elite,துணி மூட்டை ,ஸ்கூல் பேக்,ஸ்டூல்,மேஜை என்று எல்லாம் சேர்ந்துகொண்டு என் ரூம், என்னை பார்த்து “கிட்ட வராதே” என்றது. இந்த ஜெயபாரதம் பர்னிச்சர் கடை ஷோரூமில் நான் எங்கு உக்கார்வது?இன்னும் ஒம்பது நாட்கள் நான் எங்கு வாழ்வது? மனதை தேற்றிக்கொண்டு, இரவு உறங்கினேன்.
காலை எட்டு மணி. மனைவி ,“சாயங்காலம் சீக்கிரம் வாங்க.நெறைய பேர் வீட்டுக்கு போய் அழைக்கணும்.டூ வீலர்லேயே போய் வந்துடலாம்”. நவராத்திரிகளில், ஒவ்வொரு மாமிகளும் இரண்டு முறை சந்திக்கிறார்கள். நாம் போய் அழைக்க வேண்டும்.அவர்கள் வந்து போவார்கள்.ரொம்ப சந்தோஷம்!
சாயங்காலம் ஆபீசிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தால், ஒரு மாமி சுருதியே சேராமல்,பாட்டு பாடிக்கொண்டு இருந்தாள். ஏதோ பால்காரன் பால் பாக்கட் போட வந்தவனை போல என்னை பார்த்த மனைவி,நான் வந்ததை பெரிதாக பொருட்படுத்தவில்லை. நல்ல பசி.உள்ளே கிச்சனுக்கு போனால், எனக்கு மிகவும் பிடிக்காத கடலை சுண்டல் மட்டுமே இருந்தது.பசி ருசி அறியாது.”ஒம்பது நாளும் சுண்டல்தானா? நவராத்திரிக்கு ஏன் ஒரு போண்டா,பஜ்ஜி,கேசரி என்று செய்யக்கூடாது?” என்று நொந்தபடி சுண்டலை கொரித்தேன். இரவு எட்டு மணிக்கு, என் உறவினர் ஒருவர் குடும்பத்தோடு வந்து, நாளை நிறைவு செய்தார்.அவர் மகன்,மகளோடு என் மகள் நன்றாக விளையாடினாள்.
அப்பா, அவங்க வீட்டுக்கு போகலாம்ப்பா”
“சரி” என்றேன்.
நாளைக்கு சண்டே.என் போன்ற சோம்பேறிகளின் சொர்க்கம்.ஆனால்,காலை எட்டு மணிக்கு என் மகள் படிக்கும் பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நவராத்திரி வழிபாடு.எட்டு மணிக்கு அங்கே என் மகள் மேக்கப் செய்து கொண்டு,பெற்றோருடன் போய் நிற்க வேண்டுமாம்.ஏன் மாலையில் வழிபடலாமே? பள்ளி விதி.மீற முடியாது.எனவே,காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.ஞாயிற்று கிழமை காலை ஆறு மணி என்பது  எனக்கு நடுநிசி அல்லவா? என்ன கொடுமை? பரவாயில்லை....... மகளுக்காக செய்வோம்.
போய் திரும்பி வந்ததும் “அவங்க வீட்டுக்கு போகணும்,இவங்க வீட்டுக்கு போகணும்.வண்டி எடுங்க”
 என்று  மனைவி என்னை மீண்டும் டூவீலருக்கு டிரைவராக பணி அமர்த்தினாள்.அப்புறம், காய்கறி வாங்க அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றேன்.வேகாத வெயிலில், கையில் காய்கறி கூடையுடன்,”உன்னைப்போல் ஒருவன்“ பட கமல் மாதிரி வீடு திரும்பினேன். இந்த ஞாயிறு பாதிநாள் வீணான மாதிரி ஒரு பீலிங். மிக அசதி. மதியம் கண்டிப்பாக தூங்க வேண்டும்.
சாப்பாடு முடிந்து,இரண்டு மணிக்கு நான் சந்தோஷமாக தூங்க ஆயத்தப்படுத்தும்போது போன் அழைத்தது.மனைவி வழி சித்தி On the Way.. “இப்ப தூங்காதீங்க.கொஞ்ச நேரம்.அவங்க வந்து போனப்புறம் தூங்கிக்கலாம்.வெத்திலை பாக்கு வாங்கிக்க வர்றாங்க “ என்றாள் மனைவி.
“ஏன்,கடையிலேயே வாங்கிக்கலாமே?” என்று சொல்ல நினைத்தேன்.சிரிக்க மாட்டாள்.சொல்லவில்லை.
அவள் சதிகாரி.
சித்திக்கு  அப்புறம், அண்ணன்,அத்தை,மாமிகள் என்று வரிசையாக தேர்தல் வேட்பாளர்கள் மாதிரி பலர் வந்தனர். இன்னிக்கு நான் தூங்கினா மாதிரிதான். மீண்டும் பாட்டு.மீண்டும் சுண்டல். “நீ கொஞ்சம் குண்டாயிட்ட மாதிரி இருக்குடா.....கொஞ்சம் ஒல்லியாயிட்ட” என்றபடி, அன்பான சொந்தக்காரர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.வருபவர்களுக்கு கீபோர்ட் வாசித்துக்காட்டி என் மகள் ஒருபக்கம் கைத்தட்டல் வாங்கிக்கொண்டிருந்தாள்.உறவினர்களை பார்த்ததில் எனக்கும் சந்தோஷம்தான்.
ஆனால்,என் தூக்கம் ஏக்கமாகி நின்றது.பல பேர் வந்து போயினர்.இரவு எட்டு மணிக்கு “Airtel Super Singer’-இல் கடைசி Contestant மாதிரி, ஒரு மாமி வந்து மோசமாக பாடினாள்.சூப்பர் சிங்கர் இல்லை.ஏன்,சிங்கரே இல்லை.நான் Vote செய்வதாகவும் இல்லை.BAD என்று டைப் செய்து இந்த மாமி மொபைலுக்கே SMS அனுப்பலாமா என்று வெறியானேன்.
வீட்டுக்கு வந்த அத்தனை பேரும், கொலுவை கட்டிய என் மனைவியை பாராட்டினர்.கூட வேலை செய்த கொத்தனார் நான்  படும்பாடு அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. மனைவி உற்சாகமாக இருக்கிறாள்.ம்ம்ம்..எனக்கு சந்தோஷம்தான்.
அப்பாடா ! ஒரு வழியாக ஆயுத பூஜை வந்தாச்சு.கொலு முடிவுக்கு வருகிறது.
எங்கே என் டாட்டா ஸ்கை டிவி ரிமோட்?எங்கே என் லேப்டாப்?
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே” மனம் குதூகலித்தது.
ஆனாலும்,மனதின் ஒரு மூலை, கொலுவில் உள்ள சில நல்ல விஷயங்களையும் சற்றே யோசித்துப்பார்த்தது. இந்த கொலு எத்தனை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது?
வீட்டு பெண்களுக்கு ஒம்பது நாட்கள் ஒரு மாறுபட்ட assignment கொடுக்க, உற்சாகம் அளிக்க....டிவி மெகா சீரியல்களிலிருந்து  நாம் விடுபட....கொலு வைப்பதில்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் Creativity/art வெளிப்பட....இந்த அவசர உலகில் சொந்தங்கள்,நண்பர்கள் இருப்பதை நினைவுபடுத்த....உறவு மேம்பட.... பாட்டு பாட....மகளுக்கு நிறைய குழந்தைகளின் நட்பு கிடைக்க.....வருபவர்களுக்கு அவள் கீபோர்ட் வாசித்து காட்ட...
அட! இன்னும் எத்தனை?
என் சுதந்திரமும்,தூக்கமும் போனால் போகட்டும்.
எனக்குள் “Surf Excel” வாஷிங்பவுடர் விளம்பரம் மாதிரி, ஒலித்தது ஒரு குரல் :)
“கொலு நல்லது”