Oct 24, 2012

கொலுமேனியா

வருடம் முழுவதும் வாழ்க்கையில் வரும் எல்லா சோதனைகளையும் தாங்கும் சக்தி எனக்கு எங்கிருந்து வந்தது?
 
நவராத்திரி கொலு !
அந்த ஒம்பது நாட்கள்,நான் நொந்த ஒம்பது நாட்கள்.
எனக்கு இந்த பண்டிகைகள்,கும்பல்,வெளியில் சுற்றுவது எல்லாமே சற்று அலர்ஜி சார்.ஒரு நாள் லீவு கிடைத்தால், அக்கடாவென்று வீட்டில் ஈஸி சேரில் உக்கார்ந்து இளையராஜாவை கேட்டுக்கொண்டு இனிமையாக பொழுதை கழிப்பது, Facebook/Twitter என்று லேப்டாப்பை நோண்டுவது,டிவியில் ‘அனிமல்பிளானட்’ பார்ப்பது,மதியம் உணவு முடித்து, தவறாமல் ஒரு கும்பகர்ண தூக்கம் போடுவது போன்றவை என் சமுதாய கடமைகளில் சில.
அக்டோபர் மாதம் வந்தது இந்த கொலு. என் விடுமுறை ஜாலி, காலி.
இம்முறை, மனைவி மாம்பலம் போய் வாங்கி வந்திருக்கும்  சில பல குட்டி குட்டி பிளாஸ்டிக் சமாச்சாரங்கள், இன்னும் சற்று நாட்களில் வீசப்போகும் கொலு புயலுக்கான முன் எச்சரிக்கையாக எனக்கு உணர்த்தின.ப்ளவுஸ்  பிட்,பழம்,வெத்திலை,பாக்கு, புதிதாக சில பொம்மை செட்டுகள்,குழந்தைகளுக்கு கொடுக்க ஜிமிக்கி,தோடு,செயின் மற்றும்  பிளாஸ்டிக் ட்ரே,குங்கும சந்தன குமிழ்கள் etc etc என்று ஒரு வால்மார்ட்டையே வாங்கி குவித்து, முழு ஜோரில் அவள் நவராத்திரிக்கு தயாராகிவிட்டாள்.இனி, வீட்டில் ஒம்பது நாள் என் சுதந்திரம்?
கொலுவுக்கு முன் தினம் ஆபீசிலிருந்து வீடு திரும்பிவந்து பார்த்தால், என் ஆஸ்தான ஈஸிசேரை காணோம்.மடக்கி எங்கோ மூலையில் சொருகி வைக்கப்பட்டது, என் மனதுக்கு வலித்தது. ஹால் நடுவில் இருந்த என் ‘சேட்டு’ சோபா செட் நகர்த்தப்பட்டு, இனி ஒம்பது நாட்களுக்கு டிவி இல்லை என்பதை தெரிவித்தது.பரண் மேல் இருந்த பத்து அட்டை பெட்டிகள் என்னை பார்த்து சிரித்தன. மேலே பரணை பார்த்தபடி,மனைவி சொன்னாள்.
“கொஞ்சம் பொம்மை அட்டை பெட்டிகளையெல்லாம் இறக்கி தாங்க”
சரி...இன்று போர்ட்டர் உத்தியோகம்தான்.ஸ்டூலில் ஏறி பார்த்தால், ‘கொஞ்சம்’ பொம்மை இல்லை.நிறைய.சென்னையில் மற்றவர்கள் வீட்டில் வைக்க பொம்மை இருக்குமா என்ற ஐயத்துடன் பெட்டிகள் அனைத்தையும் இறக்கினேன்.
“அப்படியே அந்த கொலு படி ஸ்டீல் ப்ளேட்,ஆங்கிள்,போல்ட் நட்,மனை,லொட்டு,லொசுக்கு எல்லாத்தையும் எடுங்க”
எப்பவுமே முழு “Job Scope”-ஐ சொல்லாத நல்ல HR Manager அவள். வேலையில் இறங்கிய பின், “அப்படியே அதையும்” என்று பல வேலைகளை சேர்த்து தரும் திறமைசாலி. எல்லாவற்றையும் கூலி இல்லாது இறக்கி கொடுத்தேன். நல்ல வேளை ! நான் “போல்ட் நட்”டுகளை சரியாக முடுக்க மாட்டேன் என்ற அவள் ஐயம் காரணமாக,  கொலுப்படி அமைக்கும் பொறுப்பு Outsource செய்யப்பட்டிருந்தது. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஜேக்கப் என்னும் ப்ளம்பர் வந்து ஸ்டீல் பிளேட்டுகளை இணைத்து படி அமைத்து,விழாவினை துவக்கி வைத்தார்.வீடு முழுவதும் அட்டைபெட்டிகள் பிரிக்கப்பட்டு கொலு பொம்மைகள் ஒவ்வொன்றாக படி ஏறின.ஹால் முழுவதும் ஆக்கிரமித்து, பிரம்மாண்டமாக டி.ராஜேந்தர் பட செட் மாதிரி கொலு அரங்கேற்றம் ஆரம்பமானது.பேசாமல் நானும் ஒரு படியில் போய் ஒம்பது நாட்கள் உக்காந்துவிடலாமா என்று யோசித்தேன்.ஹாலில் பாக்கி இருந்த கொஞ்ச இடத்தில் என் செல்ல மகள், மணலை கொட்டி, “அப்பா,இது பார்க் செட்” என்றாள். குட்டி குட்டியாக பெஞ்ச்,சேர்,பிளாஸ்டிக் புல்வெளி,விலங்குகள்,வாகனங்கள் என்று அவள் தனியாக ஒரு கட்சி துவங்கி, ஒரு ’மினி கொலு’ ஆரம்பித்திருந்தாள்.பார்க்க அழகாகத்தான் இருந்தது. என் வீட்டு ஹால் இவ்வளவு அழகாக நான் பார்த்ததே இல்லையே?சரி, டிவி இல்லாவிட்டால் என்ன?நமக்கு நம் ரூம்தான்  கதி.நாம் உண்டு நம் Laptop உண்டு. சிவனே என்று கிடப்போம் என்று நினைத்தபடி அங்கே என் ரூமுக்கு போய் பார்த்தால்.....அங்கு பெரிய அநியாயம் இழைக்கப்படிருந்தது.
ஹால் இவ்வளவு சுத்தமாக இருந்ததிற்கு காரணம், அங்குள்ள அனைத்து சாமான்களும் என் ரூமிற்கு வந்ததே! என் ரூம் ஓர் தற்காலிக              “கோடோவ்னாக” மாற்றப்பட்டிருந்தது. ஓட்டை ஒடசல் பழைய சேர், நான் வாங்கி இரண்டு முறை மட்டுமே பயன்படுத்திய Orbitek Elite,துணி மூட்டை ,ஸ்கூல் பேக்,ஸ்டூல்,மேஜை என்று எல்லாம் சேர்ந்துகொண்டு என் ரூம், என்னை பார்த்து “கிட்ட வராதே” என்றது. இந்த ஜெயபாரதம் பர்னிச்சர் கடை ஷோரூமில் நான் எங்கு உக்கார்வது?இன்னும் ஒம்பது நாட்கள் நான் எங்கு வாழ்வது? மனதை தேற்றிக்கொண்டு, இரவு உறங்கினேன்.
காலை எட்டு மணி. மனைவி ,“சாயங்காலம் சீக்கிரம் வாங்க.நெறைய பேர் வீட்டுக்கு போய் அழைக்கணும்.டூ வீலர்லேயே போய் வந்துடலாம்”. நவராத்திரிகளில், ஒவ்வொரு மாமிகளும் இரண்டு முறை சந்திக்கிறார்கள். நாம் போய் அழைக்க வேண்டும்.அவர்கள் வந்து போவார்கள்.ரொம்ப சந்தோஷம்!
சாயங்காலம் ஆபீசிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தால், ஒரு மாமி சுருதியே சேராமல்,பாட்டு பாடிக்கொண்டு இருந்தாள். ஏதோ பால்காரன் பால் பாக்கட் போட வந்தவனை போல என்னை பார்த்த மனைவி,நான் வந்ததை பெரிதாக பொருட்படுத்தவில்லை. நல்ல பசி.உள்ளே கிச்சனுக்கு போனால், எனக்கு மிகவும் பிடிக்காத கடலை சுண்டல் மட்டுமே இருந்தது.பசி ருசி அறியாது.”ஒம்பது நாளும் சுண்டல்தானா? நவராத்திரிக்கு ஏன் ஒரு போண்டா,பஜ்ஜி,கேசரி என்று செய்யக்கூடாது?” என்று நொந்தபடி சுண்டலை கொரித்தேன். இரவு எட்டு மணிக்கு, என் உறவினர் ஒருவர் குடும்பத்தோடு வந்து, நாளை நிறைவு செய்தார்.அவர் மகன்,மகளோடு என் மகள் நன்றாக விளையாடினாள்.
அப்பா, அவங்க வீட்டுக்கு போகலாம்ப்பா”
“சரி” என்றேன்.
நாளைக்கு சண்டே.என் போன்ற சோம்பேறிகளின் சொர்க்கம்.ஆனால்,காலை எட்டு மணிக்கு என் மகள் படிக்கும் பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நவராத்திரி வழிபாடு.எட்டு மணிக்கு அங்கே என் மகள் மேக்கப் செய்து கொண்டு,பெற்றோருடன் போய் நிற்க வேண்டுமாம்.ஏன் மாலையில் வழிபடலாமே? பள்ளி விதி.மீற முடியாது.எனவே,காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.ஞாயிற்று கிழமை காலை ஆறு மணி என்பது  எனக்கு நடுநிசி அல்லவா? என்ன கொடுமை? பரவாயில்லை....... மகளுக்காக செய்வோம்.
போய் திரும்பி வந்ததும் “அவங்க வீட்டுக்கு போகணும்,இவங்க வீட்டுக்கு போகணும்.வண்டி எடுங்க”
 என்று  மனைவி என்னை மீண்டும் டூவீலருக்கு டிரைவராக பணி அமர்த்தினாள்.அப்புறம், காய்கறி வாங்க அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றேன்.வேகாத வெயிலில், கையில் காய்கறி கூடையுடன்,”உன்னைப்போல் ஒருவன்“ பட கமல் மாதிரி வீடு திரும்பினேன். இந்த ஞாயிறு பாதிநாள் வீணான மாதிரி ஒரு பீலிங். மிக அசதி. மதியம் கண்டிப்பாக தூங்க வேண்டும்.
சாப்பாடு முடிந்து,இரண்டு மணிக்கு நான் சந்தோஷமாக தூங்க ஆயத்தப்படுத்தும்போது போன் அழைத்தது.மனைவி வழி சித்தி On the Way.. “இப்ப தூங்காதீங்க.கொஞ்ச நேரம்.அவங்க வந்து போனப்புறம் தூங்கிக்கலாம்.வெத்திலை பாக்கு வாங்கிக்க வர்றாங்க “ என்றாள் மனைவி.
“ஏன்,கடையிலேயே வாங்கிக்கலாமே?” என்று சொல்ல நினைத்தேன்.சிரிக்க மாட்டாள்.சொல்லவில்லை.
அவள் சதிகாரி.
சித்திக்கு  அப்புறம், அண்ணன்,அத்தை,மாமிகள் என்று வரிசையாக தேர்தல் வேட்பாளர்கள் மாதிரி பலர் வந்தனர். இன்னிக்கு நான் தூங்கினா மாதிரிதான். மீண்டும் பாட்டு.மீண்டும் சுண்டல். “நீ கொஞ்சம் குண்டாயிட்ட மாதிரி இருக்குடா.....கொஞ்சம் ஒல்லியாயிட்ட” என்றபடி, அன்பான சொந்தக்காரர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.வருபவர்களுக்கு கீபோர்ட் வாசித்துக்காட்டி என் மகள் ஒருபக்கம் கைத்தட்டல் வாங்கிக்கொண்டிருந்தாள்.உறவினர்களை பார்த்ததில் எனக்கும் சந்தோஷம்தான்.
ஆனால்,என் தூக்கம் ஏக்கமாகி நின்றது.பல பேர் வந்து போயினர்.இரவு எட்டு மணிக்கு “Airtel Super Singer’-இல் கடைசி Contestant மாதிரி, ஒரு மாமி வந்து மோசமாக பாடினாள்.சூப்பர் சிங்கர் இல்லை.ஏன்,சிங்கரே இல்லை.நான் Vote செய்வதாகவும் இல்லை.BAD என்று டைப் செய்து இந்த மாமி மொபைலுக்கே SMS அனுப்பலாமா என்று வெறியானேன்.
வீட்டுக்கு வந்த அத்தனை பேரும், கொலுவை கட்டிய என் மனைவியை பாராட்டினர்.கூட வேலை செய்த கொத்தனார் நான்  படும்பாடு அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. மனைவி உற்சாகமாக இருக்கிறாள்.ம்ம்ம்..எனக்கு சந்தோஷம்தான்.
அப்பாடா ! ஒரு வழியாக ஆயுத பூஜை வந்தாச்சு.கொலு முடிவுக்கு வருகிறது.
எங்கே என் டாட்டா ஸ்கை டிவி ரிமோட்?எங்கே என் லேப்டாப்?
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே” மனம் குதூகலித்தது.
ஆனாலும்,மனதின் ஒரு மூலை, கொலுவில் உள்ள சில நல்ல விஷயங்களையும் சற்றே யோசித்துப்பார்த்தது. இந்த கொலு எத்தனை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது?
வீட்டு பெண்களுக்கு ஒம்பது நாட்கள் ஒரு மாறுபட்ட assignment கொடுக்க, உற்சாகம் அளிக்க....டிவி மெகா சீரியல்களிலிருந்து  நாம் விடுபட....கொலு வைப்பதில்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் Creativity/art வெளிப்பட....இந்த அவசர உலகில் சொந்தங்கள்,நண்பர்கள் இருப்பதை நினைவுபடுத்த....உறவு மேம்பட.... பாட்டு பாட....மகளுக்கு நிறைய குழந்தைகளின் நட்பு கிடைக்க.....வருபவர்களுக்கு அவள் கீபோர்ட் வாசித்து காட்ட...
அட! இன்னும் எத்தனை?
என் சுதந்திரமும்,தூக்கமும் போனால் போகட்டும்.
எனக்குள் “Surf Excel” வாஷிங்பவுடர் விளம்பரம் மாதிரி, ஒலித்தது ஒரு குரல் :)
“கொலு நல்லது”

Sep 22, 2012

காணி நிலம் வேண்டும்



எனக்கு இந்த வீடு ,பிளாட்’டுன்னு வாங்க அலையறது சுத்தமா பிடிக்காது சார். ஆனா,ரொம்ப நாளாவே ,ஒரு வீடோ ,மனையோ வாங்கணும்கறது என் பொண்டாட்டியோட ஆசை. “எந்த ஏரியால யார் பிளாட் போட்ருக்காங்க? என்ன ரேட்?யாரு பில்டர்?”..... எல்லாம் அவளுக்கு அத்துப்படி! அவள் ஒரு நடமாடும் “சுலேகா.காம்”. என்னை ,ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி போடச்சொல்லி அவள் ரொம்பநாளா டார்ச்சர் பண்ணிகொண்டிருந்தாள். எப்படா ஞாயித்து கிழமை வரும்?’’னு  ஏங்கி ஏங்கி, வாரத்தை ஓட்டி, ஞாயித்துகிழமை வந்துட்டா போதும். நமக்கு வேலை ரெடியா இருக்கும். அவள் சனிக்கிழமையே, Hindu-Property Plus, தினமலர்- வீடு,மனை வரி விளம்பரங்களை ஒண்ணு விடாம, IAS Exam மாதிரி படிச்சிட்டு, அடுத்த நாள் விசிட்டுக்கு- ஊரப்பாக்கம், சிங்கபெருமாள் கோயில்,ECR,கூடுவாஞ்சேரி’னு பிளான் போட்டு வைத்து, ரெடியா இருப்பாள்.ஞாயிற்றுகிழமைகளில் அவள் அடிக்கும் ஸ்டாண்டர்ட் டயலாக்-
”நாலு இடம் பாத்தாதான் அமையும்.கெளம்புங்க..எப்பப்பாத்தாலும், ஈஸி சேர்ல ஒக்காந்துண்டு”.
எனக்கு ”ஞாயித்துகிழம ஏண்டா வருது?’’ன்னு ஆயிடிச்சி. வேகாத வெயில்ல என் டொக்கு ஸ்கூட்டர்ல  நானும் மூணு வருஷமா, வீடு மனை வாங்க, அலையா அலையறேன். ஆனா, இது வரைக்கும் ஒண்ணும் படியல.
என்னமோ தெரியல..கருமம்..இந்த நிலம் வாங்கற பிசினஸ் மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்கல சார். வீடு வாங்கணும்னா, அதிலதான், எத்தன தலைவலி? பட்டா,வில்லங்கம்,ஈசி,இத்யாதி,இத்யாதி....தூத்தேரி...மனுஷன என்ன பாடு படுத்துது, இந்த நிலம் வாங்கற ஆசை?
பட்டா,தாய்ப்பட்டா, நாய்ப்பட்டா!  பாடு பட்டா..அவஸ்தை பட்டா’தான் இது கெடைக்கும்.அததான், சுருக்கமா இத பட்டா‘ங்கறாங்களோ?
இந்த “வில்லங்கம் “? பேர்’லயே வில்லங்கம் .... எனக்கெதுக்கு சார் இந்த வில்லங்கம்?
EC –ன்னு பேரு.ஆனா,அதா வாங்கறது என்ன அவ்வளவு ஈசியா?
எல்லாம் சரியா இருந்தா, ஒரு லீகல் ஒபீனியன் வாங்கணுமாம் ! (இதுல நடக்கற ஊழலுக்கு, ‘இல்லீகல்’ ஒபீனியன்தான்யா வாங்கணும்!)
இது வரைக்கும் நான் வீடு/மனை பார்க்க சுத்தின கதைகள ஒரு மெகா சீரியாலாவே எடுக்கலாம்.(‘சித்தி....’ மாதிரி ‘சுத்தி’?).ஆனா, நீங்க பாக்க மாட்டீங்க! அதனால,சுருக்கமாவே சொல்றேன்.
மொதல்ல 2009-ல, குரோம்பேட்டை ரங்கா நகர்ல ஒரு வீடு பாத்தேன்... பாரதியார் பாடுனா மாதிரி, பத்து பன்னெண்டு தென்னை மரங்களுக்கு நடுவுல ஒரு கிரௌண்டுல,என் பட்ஜெட்’டுக்குள்ள, ஒரு வீடு. என் புரோக்கர் மோகன் சரியான இடமாத்தான்யா புடிச்சிருக்கான். Seller வயசான மனுஷன்.ரொம்ப அமைதியானவர்.நல்ல மனுஷன்.மணிரத்தினம் படம் மாதிரி அளவா பேசறார்.ஆனா, தெளிவா பேசறார்.எல்லாருக்கும் பிடிச்சி...டோக்கன் அட்வான்ஸ் 1000/- கூட கொடுத்துட்டேன். டீல் ஸ்மூத்தா முடிஞ்சுது.ரெண்டு நாள் கழிச்சு ,காத்தால அவர் வீட்டுக்கு போய் ,கேட்டேன்...
” சார்..  ரெஜிஸ்ட்ரேசஷன் எப்போ வெச்சிக்கலாம் சார் ?”
Owner-ஐ கேட்டு சொல்றேன்”
அடப்பாவி! அப்போ, நீ Owner இல்லையா?
அப்புறம் விசாரிச்சதில தெரிஞ்சிது Owner-க்கு இத விக்கறதில இஷ்டம் இல்லன்னு!
சரியாப்போச்சு ! அட்வான்ச திருப்பி வாங்கிட்டு வெளியில வந்துட்டேன்.
அடுத்து, ஊரப்பாக்கம் சரவணா பில்டர்ஸ்...Row Houses...அட்டகாசம்..நல்ல  Lay out. இம்முறை என் மனைவியும் உடன் வந்தாள்.சைட் ஆபீசில் விநாயகர்,முருகர்,அம்மன் என்று ஏகமாய் பக்தி போட்டா’ க்கள்... பிளாட் ப்ரொமோட்டர், நெத்தியில பட்டையோட நடுவுல பெரிய குங்கும பொட்டு கூட வெச்சிருந்தார். நல்ல கட்டுமஸ்தான ஆள். சரவணா பில்டரா,பாடி பில்டரா? ஆனாலும், “நல்ல மனுஷன்” என்று என் மனைவி செர்டிபிகெட் அடித்து கொடுத்தாள்.
“சார்.. இந்த டாகுமெண்ட் copy எல்லாம் கொடுத்தீங்கன்னா...ஒரு legal opinion வாங்கிண்டு வந்து ,ஒடனே புக் பண்ணிடறோம்.”
‘சார்..அட்வான்ஸ் பத்தாயிரம் கொடுத்தீங்கன்னா ரெண்டுநாள்’ல ஜெராக்ஸ் காப்பி ஒரு செட் கொடுப்போம்’னார்....
எடு செக்க...கிழி...கொடு.Take that Ten Thousand !
பணம் கொடுத்தாச்சு...ரெண்டு நாள் கழிச்சி நான் அவருக்கு போன் பண்ணினேன்.
“சார்..அப்புறம், அந்த டாகுமெண்ட் ஜெராக்ஸ் காப்பி இருக்கா...”
ஏதோ, நான் நரசூஸ் காப்பி கேட்ட மாதிரி “பேஷ் பேஷ் நல்லா இருக்கு”ன்னார்.
“எந்த டாகுமெண்ட்? ஒ....அதுவா.. ஆபீஸ்ல வந்து வாங்கிக்கங்க” -லைன் கட்.
எந்த ஆபீஸ்?
நொந்த ஆபீஸ் ! ஒரிஜினல் இருந்தால் தானே ஜெராக்ஸ்?
பின்னர்,பல முறை போன் செய்தும் ஒரு ஜெராக்ஸ் பேப்பரும் கிடைக்க வில்லை. அந்த படுபாவி ‘பாடி பில்டரி’ன் நெத்தி பட்டை ஞாபகம் வந்தது. எனக்கும் போட்டு விட்டான் !பத்தாயிரம்  ரூபாய் அவுட்... மாமா பிஸ்கோத்து !
அடுத்து,பல்லாவரம் அருகே, பிரம்மாண்டமாய் ஒரு அபார்ட்மெண்ட். இந்த இடம் எனக்கே பிடித்திருந்தது. பெரிய Promoters. Launch தினம் அன்றே போய் ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து விட்டேன். கோட்டுசூட்டு போட்ட  நல்ல ஆபீசர்கள்,ரொம்பவே டீசன்ட். நல்ல rate-இல் 3 BHK FLAT. குளுகுளு ஸ்விம்மிங் பூல், கிளப்,மினி தியேட்டர் என்று என் வாழ்க்கை மாறப்போகிறது. மனைவி, என்னை மிகவும் பாராட்டினாள். பின்னர் மேற்கொண்டு  பேச, மறு நாள் அவர்கள் கம்பெனி ஆபீஸ் சென்றேன். குளுகுளு A/C ஆபீஸ்.அழகான ரிசப்ஷனிஸ்ட். டீசன்ட்டான பேச்சு. எல்லா டாகுமன்ட்ஸும் காட்டினார்கள். பிளான் அப்ரூவல் பார்த்தால், ஒரு FLOOR -க்கு நாலு கிச்சன். கட்டுவது ஆறு ! இப்போது ,ஸ்விம்மிங் பூல் எனக்கு சுட்டது! அய்யா..நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு!
“நான் ஒரு Straight forward ஆசாமி.இது நேர்மையாக உழைத்த பணம்.எனக்கு எல்லாமே சரியாக இருக்க வேண்டும் சார்.எனக்கு இந்த Flat வேண்டாம்” என்றேன். ஆனாலும், அது ஒரு நல்ல கம்பெனி. ஒரு வாரத்தில், அட்வான்ஸ் பணத்தை உடனே திருப்பி விட்டார்கள்.
பின்னர்,நமக்கு வீடெல்லாம் வேண்டாம்;எங்காவது நிலம் வாங்கி போடலாம் என்று முடிவு செய்து ஒரு ஞாயிற்றுகிழமை கூடுவாஞ்சேரி  வரை சிறப்பு பயணம் மேற்கொண்டேன். ஒரு பிரபல Land Promoters போட்ட Layout. ஏரிக்கரையோரம், நல்லதொரு நிலம். எல்லாம் பிடித்து வர, நான் சற்றே மனையை சுற்றி பார்க்க போனேன்...அருகே பார்த்த ஒரு போர்டு எனக்கு அதிர்ச்சி அளித்தது....
”மயானத்துக்கு போகும் வழி!”
போச்சு !வீட்டுக்கு பக்கத்தில் சுடுகாடா?வேண்டாம் சார்.
இந்த மயான அதிர்ச்சியிலுருந்து மீண்டு ,அடுத்து நான் போனது அனகாபுத்தூர். மனையை பற்றி அட்ரஸ் விசாரிக்க வேண்டி, அருகில் ஒரு வீட்டு  கதவை தட்டினால்...கதவை திறந்து கொண்டு வெளியே வந்தது ஒரு லேடி...தலைவிரி கோலமாக வெள்ளை புடவையில்...”நா......னே.... வரு.....வேன்..” என்ற பாட்டில் பார்த்த நடிகை மாதிரி வெளியே வந்தாள். ஐயோ ! என்று அலறி, பின்னர், “கால் இருக்கா?” என்று பார்த்து உறுதி செய்தபின் ,மெல்ல கேட்டேன்...
”அம்மா..இங்க மனை ஏதும் விலைக்கு ...”?
“அங்க போங்க”..என்று வழி காட்டினாள். நன்றி தெரிவித்து,ஓட்டம் பிடித்தேன். அங்கே போய் பார்த்தால், காலி மனை.நல்ல இடம். 1800 sq.ft. அற்புதம்.  “அடிச்சோம்டா ஜாக்பாட்”.
ஆனால்..பக்கத்தில்..என்ன அது புகை?
எட்டி பார்த்தால்....
மயானம் !
அரு”மயான” அதிர்ச்சி ...ஒடுறா டேய்...
எப்படி இங்கேயும்? புரியவில்லை!
சில நாள் கழிந்தது.
“சோமங்கலத்துல நல்ல எடம். நான் வாத்யாரா வேல பாத்த இடம்..போய் ரவி ப்ரோக்கரை பாரு” என்று என் அப்பா ஆணை இட்டார். நல்ல ஊர். ஏரி.பசுமை. ஆஹா..நம் மனை வேட்டை முடிவுக்கு வந்தது என்று நினைத்துக்கொண்டு,மெல்ல உடன் வந்த ப்ரோக்கரிடம் கேட்டேன்...
”இங்க பக்கத்தில மயானம் ஏதும் இருக்கா?”
ப்ரோக்கர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்.
 “ஏன் சார்..எல்லாரும் பக்கத்துல ஸ்கூல் இருக்கா,ஹாஸ்பிடல் இருக்கான்னு கேப்பாங்க..நீங்க ....”
“யோவ்....கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்”
அவர் சொல்லவில்லை...நானே மனைக்கு பின் பக்கம் போய் பார்த்தால்.....எனக்கு அதிர்ச்சி ! சொன்னால், நம்பமாட்டீர்கள்..மீண்டும் மயானம்!
என்ன கொடுமை?  என்னால், இந்த Coincidence-ஐ நம்ப முடியவில்லை. வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி,சொல்லி சிரித்தேன்.
“இருந்தா என்னடா?”
“வேணாம்பா”.
மேலும்,சில மாதங்களில், பல இடங்களை நான் பார்த்து Reject செய்து வந்தேன்.இப்போது, இது எனக்கு ஒரு ‘சண்டே ஹாபி’யாகவே ஆகிவிட்டது. இடம் பிடித்திருந்தால் ரேட் அநியாயம். ரேட் படிந்து வந்தால்,எனக்கு பிடிக்க வில்லை. நான் வசிக்கும் ஏரியாவில், எல்லா ப்ரோக்கர்களுக்கும் நான் ஒரு “Career Challenge”-ஆகவே இருந்து வந்தேன்.
என் “மயான” ராசி பற்றி அறிந்த சில ப்ரோக்கர்கள், என்னை “சாவு கிராக்கி” என்று மனதிற்குள் திட்டி இருக்கக்கூடும்.நான் என்ன செய்வது?
என் ஆஸ்தான புரோக்கர் மோகன் மட்டும் மனம் தளராமல் விக்கிரமாதித்தன் மாதிரி முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ஒரு ஞாயிறு.நான் ஆயாசமாக படுத்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது மோகன் போன் செய்தார்.
“சார்..உடனே வாங்க..அஸ்தினாபுரம் பக்கத்தில அருமையான  இடம்..அரை கிரௌண்டுல வீட்டோட...கிளியர் டைட்டில்..பாத்துட்டு வந்துடலாம்”
மனைவியின் உந்துதலால் என் “ஈஸி சேர்” தவத்தை கலைத்து , மனதை திடப்படுத்திக்கொண்டு என் பஞ்சகல்யாணி ஸ்கூட்டரை மிதித்தேன்.மனைவி,  ” ALL THE BEST !”   என்று பால்கனியிலிருந்தபடி, டாட்டா காட்டினாள். நான் என்ன CAT Entrance exam–ஆ எழுத போகிறேன்?
ஒரு வழியாக,மோகனுடன் அஸ்தினாபுரம் போய் சேர்ந்தேன்.இதை அஸ்தினாபுரம் என்று சொல்ல முடியாது. அதையும் தாண்டி...சற்றே, ஆந்திரா பார்டரில் அது இருந்தது. புரோக்கர் மோகனை முறைத்தவாறு வீட்டை நோட்டம் விட்டேன். நல்ல வீடு. லொகேஷன் ஓகே. ஆனால்.... ஒரு Bad smell.என்ன அது? பக்கத்து வீட்டு வாசலில்...பத்து பன்னெண்டு எருமை மாடுகள் !!!! எங்கெங்கு நோக்கினும்  சாணியடா !
இந்த ஷஹருக்கு நடுவுல எப்படி ஒரு பால்காரன் பங்களா கட்டி, இத்தனை எருமைகளுடன் குடும்பம் நடத்துகிறான்? காணி நிலம் வேண்டும்.ஆனால், சாணி நிலம்??
வேண்டாம் சார்... இதுக்கு அப்புறம், ஒரு வருஷம் வெறுத்து போய் எந்த இடத்தையும் பார்க்க போக வில்லை.ப்ரோக்கர்களும், என் “வீடு பார்க்கும் பாலிசி” பிடிக்காது, என்னை ஒரு “மன்மோகன் சிங்” போல வெறுத்து ஒதுக்கினார்கள். மோகன் உள்பட...
திடீரென்று, ஒரு நாள் பெருங்களத்தூரில் 1750 ரூபாய்ல 3BHK flat என்ற ஒரு அருமையான offer   பற்றி கேள்விப்பட்டு என் அண்ணன் கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி வந்தான். என்னையும் வந்து பார்க்க சொன்னான். இன்னொரு ஞாயிறும் நாசம். மனைவியின் உந்துதலால், கிளம்பி போனேன். அற்புதம். நல்ல இடம்.ஆனால்...என் வழக்கமான சந்தேகம் கிளம்பியது !
சுத்தி போய் பார்த்தால்....Plot  பக்கத்தில் ..ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்!
யானம் !
இம்முறை,சற்றே பெரியது.மொத்த பெருங்களத்தூர் அமரர்களும் அங்கே ஒய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
எனக்கு வேண்டாம் சார்.இனிமேல் வேண்டாம்.
எவ்வளவு கிரௌண்ட் நிலம் வாங்கினாலும், ”கடைசியில், 6X4  நிலம்தான் சாஸ்வதம்” என்ற உயர்ந்த தத்துவத்தை இறைவன் எனக்கு உணர்த்தும் குறியீடாக, இதை நான் உணர்ந்தேன்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
மனை அமைவதும் !
இனி வீடு/மனை ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று உறுதியாக முடிவு செய்தேன்.எத்தனை ஞாயிற்று கிழமைகள் பாழாய்ப்போயின? இனி, வேண்டாம். விடுமுறை தினங்களில் ஒய்வு எடுப்போம். சந்தோஷமாக இருப்போம்.எங்கே என் ஈஸி சேர்?எங்கே என் MP3 பிளேயர்?
மேலும் வரும் நாட்களில், ஹிந்து Property plus/ தினமலர் ரியல் எஸ்டேட் வரிவிளம்பரங்கள்  எல்லாத்தையும் என் மனைவி கண்ணில் படாது ,நைசாக ஒளித்து வைக்க ஆரம்பித்தேன்.
அடுத்த சனிக்கிழமை-Second Saturday-ஆபீஸ் லீவு !
காலை வீட்டில் ஹாயா’க உக்கார்ந்து, டிவி போட்டேன். விஜய் டிவி அலறியது.
“செங்கல்பட்டில் இதுவரை யாருமே கொடுக்காத சதுர அடி வெறும் 150 ரூபாயில் ‘அசோகா ப்ரோமொட்டர்’ஸின் 175-ஆவது மனை பிரிவு- உடனே அணுக,மொபைல் நம்பர் 9345634256.”  என்று ஒரு மெகா சீரியல் நடிகை, ஏகத்துக்கு சிரித்துக்கொண்டிருந்தாள்.
செங்கல்பட்டா??? ரொம்ப தூரமாச்சே....உடனே சுதாரித்து, சேனல் மாற்ற முயலும்போது, பின்னால் உட்கார்ந்திருந்த, என் மனைவி அந்த நம்பரை அவள் மொபைலில்,”SAVE” செய்து கொண்டிருந்தது,எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
நாளை ஞாயிறு.
இல்லை. மீண்டும் எனக்கு சனி !

Aug 29, 2012

பத்திரமா பாத்துக்கங்க…


எனக்கு கார் ஓட்டறதுன்னாலே அலர்ஜி சார் !

லைசென்ஸ் வாங்க, ஒட்டி பழகியதோடு சரி. என்னால "8" எல்லாம் போட முடியல சார். நீளமா, ஒரு "1" மட்டும்தான் போடமுடிஞ்சது. எப்படியோ, GST ரோட்டில நேரா, 200 மீட்டர் காரை ஓட்டி காட்டி, லைசென்சும் வாங்கிட்டேன். நான் கார் ஒட்டி பழகிய நாட்களில் நான் ரோடுல பார்த்த சில பாதசாரிகள், என்னை ஒரு முக்கியமான முடிவு எடுக்க வெச்சாங்க.அந்த "எந்தரோ மகானுபாவு"க்களை இந்த கட்டுரையில நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போறேன்.

மொதல்ல, Mr.எதிர்.

இவருக்கு எவ்ளோ Traffic இருக்கற ரோட்டையும் கிராஸ் பண்றது பெரிய பிரச்சினையே இல்ல சார். இவர பொருத்தவரைக்கும், ரோடு எப்பவுமே காலியாத்தான் இருக்கும்.ஏன்னா, இவரு வண்டிங்க வர்ற Direction-க்கு நேர் எதிர் Direction-ல பாத்துக்கிட்டு தான் கிராஸ் பண்ணுவார்.உங்க வண்டி ஹாரன் எல்லாம் இவர ஒண்ணும் பண்ணாது. அவர் பாட்டுக்கு எதிர்ப்பக்கம் ரோட்ட பாத்து , 'தேமே'ன்னு போய்க்கிட்டே இருப்பார் . நீங்க தான் இவர,"பத்திரமா பாத்துக்கணும்".

இன்னும் கொஞ்ச தூரம் போனீங்கன்னா, அட்டாக் பாண்டியை  பாக்கலாம்.  வண்டி வர்ற வரைக்கும் ,ரோட்டோரம் நின்னுகிட்டு, வானத்த வெறிக்கும் இவர்,வண்டி கிட்டே வந்தவுடன்,பாய்ஞ்சு கிராஸ் பண்ணுவார்.உங்க ஹார்ட் ஒழுங்கா வேலை செய்யுதான்னு இதுக்கப்புறம் ,உங்களுக்கு தெரிஞ்சுடும் . நீங்க தான் இவரை "பத்திரமா பாத்துக்கணும்".

அப்புறம் வர்ற, இந்த மதில்மேல பூனை , ரொம்ப ஆபத்தான குருப் . இந்த Category ஆளுங்க ,ரோட பாதி கிராஸ் பண்ணிட்டு ,அப்பிடியே நடுரோட்ல நின்னிடுவாங்க.அப்புறம் உங்க பாடு திண்டாட்டம்தான்.நீங்க பிரேக்கை அடிக்கலாமா,வேணாமான்னு யோசிக்கும்போது , இந்த மனுஷன் ,ரோட்டை கிராஸ் பண்ணிடலாமா ,வேணாமான்னு டாஸ் போட்டு பார்த்துக்கொண்டிருப்பார். நீங்க வெறுத்துப்போய் ,பிரேக்கை அடிச்சிட்டு  பார்த்தா ….. நடு ரோட்ல நின்னுகிட்டு இவிங்க பண்ற காமெடி இருக்கே... சில பேர் ரோட்ல ஏதோ சாவிய தொலைச்சிட்டு தேடறா மாதிரி திரு திருன்னு முழிப்பாங்க. சிலர்,உங்களில் யார் பிரபுதேவா?” டான்ஸ் ப்ரோக்ராம்  பண்ண வந்தா மாதிரி, இந்த பக்கமா அந்த பக்கமான்னு Dance ஆடுவாங்க. சில பொம்பளைங்க , ஏதோ Miss. Universe பட்டம் ஜெயிச்சுட்டா மாதிரி, -ன்னு சிரிப்பாங்க. (எனக்கு இடுக்கண். உங்களுக்கு நகுக? நல்லா இருக்கும்மா…)சில கோவக்கார விருமாண்டிங்க, சந்தனம் ,குங்குமம் மாதிரியான மங்களகரமான வார்த்தைகளால, நம்மள திட்டிட்டு போவான்“Be careful!” -னு வடிவேல் மாதிரி ,நமக்கு நாமளே சொல்லிட்டு போக வேண்டியதுதான் .

சில பேர் கடவுள் மாதிரி , திடீர்னு வருவாங்க.வலது கையை தூக்கி, அருளாசி மாதிரி காட்டிகிட்டு ,ரோட கிராஸ் பண்ணி, போய்க்கிட்டே இருப்பாங்க. டேய், நில்டா ! நீ கையை காட்டின உடனே என்ஜின் என்ன ஆட்டோமேடிக்கா  ஸ்லோ ஆய்டுமாடா? என்ன தைரியம்?

 ஒண்ணும் பண்ணமுடியாது.இவரையும் நீங்க தான் "பத்திரமா பாத்துக்கணும் "

இப்ப ரோடுக்கு நடுவில Median- நின்னுகிட்டு இருக்கறது Mr.மகா விஷ்ணு  . கையில ஒரு சைக்கிள வெச்சுகிட்டு இந்தபக்கம் ஒரு Wheel ,அந்த பக்கம் ஒரு Wheel-னு  சிக்கலா நிப்பார்  இவர். கையில சக்கரத்தோட, அசப்புல உங்களுக்கு மஹாவிஷ்ணுவ பாத்தாப்பல இருக்கும்.கொஞ்சம் அசந்தா,சைக்கிள் வீலாலேயே கார் ப்ரீயா கோடு போட்டு கொடுப்பாரு. "பத்திரமா பாத்துக்கணும்".

அடுத்து வர்றவர், Alphabet Lover . இவருக்கு ரோட்ட, நேரா கிராஸ் பண்ணி அலுத்து போச்சு ! Z மாதிரி, J மாதிரி, S மாதிரி-ன்னு விதவிதமான Shape- இவர் ஓடி , ரோட்ட கிராஸ் பண்ணுவார். இவரையும் , நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

இந்த சிக்னல் மதியான் இருக்காரே, ரொம்ப ஸ்வரசியமானவர். சிக்னல் Green போட்டு ,வண்டியெல்லாம் நகர ஆரம்பிச்சதும், திபுதிபு-ன்னு ஓடி, வண்டிங்களுக்கு உள்ள பூந்து கிராஸ் பண்றது இவருக்கு ,ஒரு த்ரில்லிங்கான ஹாபி. நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

அப்புறம் வயசான தாத்தா பாட்டிங்க ....பாதி பேருக்கு ஹாரன் சத்தம் கேக்காது ....கண் கோளாறு இருக்கலாம் .(Oh..இது காரா? ? பாத்து வரக்கூடாதா தம்பி? ) நாளைக்கு நமக்கும் இதே நெலம தான் . நாமதான்யா அவுங்கள பத்திரமா பாத்துக்கணும்.

இப்போ ,சிக்னல் இல்லாத கிராசிங் வெண்ணிலா கபடிக்குழு வெளயாடப்போறாங்க. திடுதிப்புன்னு கிராஸ் பண்ணுவாங்க .நகர்ந்து போற வண்டிகளுக்குள்ள பூந்து வந்து ,உங்க கார் பான்னட்ல தாளம் போட்டுட்டு,அந்த பக்கம் போய்டுவாங்க.நல்ல வெளயாடுங்கய்யா...

ஆனா ஒண்ணு..இருக்கறதிலேயே, ரொம்ப டேஞ்சர் இந்த 'மொபைல் மாமு" . இவர் கைல ஒரு செல் போன வெச்சு பேசிக்கிட்டே, தரைய பாத்து தான் , கிராஸ் பண்ணுவார் . (ஏன்யா, தரைக்குள்ளயா போகப்போறே?). இவர் போன்' ஒபாமாவோட பேசி ஆப்கான் பிரச்சினைய முடிச்சப்புறம் தான் ,ரோட்ட பாக்க வாய்ப்பு இருக்கு. So, இவரையும் நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

அது சரி.

போதும்யா சாமி . இவ்ளோ பேர  'பத்திரமா பாத்துக்க' , நான் என்ன கிருஷ்ணா பரமாத்மாவா ?  இல்ல, கார்னியர் பிருக்டிஸ் ஷாம்பூவா ?

நீங்களே ,இவங்கள பத்திரமா பாத்துக்கங்க ! நான் ,பேசாம MTC சொகுசு பஸ்ல போய்க்கிறேன்.

 

************************