Aug 29, 2012

பத்திரமா பாத்துக்கங்க…


எனக்கு கார் ஓட்டறதுன்னாலே அலர்ஜி சார் !

லைசென்ஸ் வாங்க, ஒட்டி பழகியதோடு சரி. என்னால "8" எல்லாம் போட முடியல சார். நீளமா, ஒரு "1" மட்டும்தான் போடமுடிஞ்சது. எப்படியோ, GST ரோட்டில நேரா, 200 மீட்டர் காரை ஓட்டி காட்டி, லைசென்சும் வாங்கிட்டேன். நான் கார் ஒட்டி பழகிய நாட்களில் நான் ரோடுல பார்த்த சில பாதசாரிகள், என்னை ஒரு முக்கியமான முடிவு எடுக்க வெச்சாங்க.அந்த "எந்தரோ மகானுபாவு"க்களை இந்த கட்டுரையில நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போறேன்.

மொதல்ல, Mr.எதிர்.

இவருக்கு எவ்ளோ Traffic இருக்கற ரோட்டையும் கிராஸ் பண்றது பெரிய பிரச்சினையே இல்ல சார். இவர பொருத்தவரைக்கும், ரோடு எப்பவுமே காலியாத்தான் இருக்கும்.ஏன்னா, இவரு வண்டிங்க வர்ற Direction-க்கு நேர் எதிர் Direction-ல பாத்துக்கிட்டு தான் கிராஸ் பண்ணுவார்.உங்க வண்டி ஹாரன் எல்லாம் இவர ஒண்ணும் பண்ணாது. அவர் பாட்டுக்கு எதிர்ப்பக்கம் ரோட்ட பாத்து , 'தேமே'ன்னு போய்க்கிட்டே இருப்பார் . நீங்க தான் இவர,"பத்திரமா பாத்துக்கணும்".

இன்னும் கொஞ்ச தூரம் போனீங்கன்னா, அட்டாக் பாண்டியை  பாக்கலாம்.  வண்டி வர்ற வரைக்கும் ,ரோட்டோரம் நின்னுகிட்டு, வானத்த வெறிக்கும் இவர்,வண்டி கிட்டே வந்தவுடன்,பாய்ஞ்சு கிராஸ் பண்ணுவார்.உங்க ஹார்ட் ஒழுங்கா வேலை செய்யுதான்னு இதுக்கப்புறம் ,உங்களுக்கு தெரிஞ்சுடும் . நீங்க தான் இவரை "பத்திரமா பாத்துக்கணும்".

அப்புறம் வர்ற, இந்த மதில்மேல பூனை , ரொம்ப ஆபத்தான குருப் . இந்த Category ஆளுங்க ,ரோட பாதி கிராஸ் பண்ணிட்டு ,அப்பிடியே நடுரோட்ல நின்னிடுவாங்க.அப்புறம் உங்க பாடு திண்டாட்டம்தான்.நீங்க பிரேக்கை அடிக்கலாமா,வேணாமான்னு யோசிக்கும்போது , இந்த மனுஷன் ,ரோட்டை கிராஸ் பண்ணிடலாமா ,வேணாமான்னு டாஸ் போட்டு பார்த்துக்கொண்டிருப்பார். நீங்க வெறுத்துப்போய் ,பிரேக்கை அடிச்சிட்டு  பார்த்தா ….. நடு ரோட்ல நின்னுகிட்டு இவிங்க பண்ற காமெடி இருக்கே... சில பேர் ரோட்ல ஏதோ சாவிய தொலைச்சிட்டு தேடறா மாதிரி திரு திருன்னு முழிப்பாங்க. சிலர்,உங்களில் யார் பிரபுதேவா?” டான்ஸ் ப்ரோக்ராம்  பண்ண வந்தா மாதிரி, இந்த பக்கமா அந்த பக்கமான்னு Dance ஆடுவாங்க. சில பொம்பளைங்க , ஏதோ Miss. Universe பட்டம் ஜெயிச்சுட்டா மாதிரி, -ன்னு சிரிப்பாங்க. (எனக்கு இடுக்கண். உங்களுக்கு நகுக? நல்லா இருக்கும்மா…)சில கோவக்கார விருமாண்டிங்க, சந்தனம் ,குங்குமம் மாதிரியான மங்களகரமான வார்த்தைகளால, நம்மள திட்டிட்டு போவான்“Be careful!” -னு வடிவேல் மாதிரி ,நமக்கு நாமளே சொல்லிட்டு போக வேண்டியதுதான் .

சில பேர் கடவுள் மாதிரி , திடீர்னு வருவாங்க.வலது கையை தூக்கி, அருளாசி மாதிரி காட்டிகிட்டு ,ரோட கிராஸ் பண்ணி, போய்க்கிட்டே இருப்பாங்க. டேய், நில்டா ! நீ கையை காட்டின உடனே என்ஜின் என்ன ஆட்டோமேடிக்கா  ஸ்லோ ஆய்டுமாடா? என்ன தைரியம்?

 ஒண்ணும் பண்ணமுடியாது.இவரையும் நீங்க தான் "பத்திரமா பாத்துக்கணும் "

இப்ப ரோடுக்கு நடுவில Median- நின்னுகிட்டு இருக்கறது Mr.மகா விஷ்ணு  . கையில ஒரு சைக்கிள வெச்சுகிட்டு இந்தபக்கம் ஒரு Wheel ,அந்த பக்கம் ஒரு Wheel-னு  சிக்கலா நிப்பார்  இவர். கையில சக்கரத்தோட, அசப்புல உங்களுக்கு மஹாவிஷ்ணுவ பாத்தாப்பல இருக்கும்.கொஞ்சம் அசந்தா,சைக்கிள் வீலாலேயே கார் ப்ரீயா கோடு போட்டு கொடுப்பாரு. "பத்திரமா பாத்துக்கணும்".

அடுத்து வர்றவர், Alphabet Lover . இவருக்கு ரோட்ட, நேரா கிராஸ் பண்ணி அலுத்து போச்சு ! Z மாதிரி, J மாதிரி, S மாதிரி-ன்னு விதவிதமான Shape- இவர் ஓடி , ரோட்ட கிராஸ் பண்ணுவார். இவரையும் , நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

இந்த சிக்னல் மதியான் இருக்காரே, ரொம்ப ஸ்வரசியமானவர். சிக்னல் Green போட்டு ,வண்டியெல்லாம் நகர ஆரம்பிச்சதும், திபுதிபு-ன்னு ஓடி, வண்டிங்களுக்கு உள்ள பூந்து கிராஸ் பண்றது இவருக்கு ,ஒரு த்ரில்லிங்கான ஹாபி. நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

அப்புறம் வயசான தாத்தா பாட்டிங்க ....பாதி பேருக்கு ஹாரன் சத்தம் கேக்காது ....கண் கோளாறு இருக்கலாம் .(Oh..இது காரா? ? பாத்து வரக்கூடாதா தம்பி? ) நாளைக்கு நமக்கும் இதே நெலம தான் . நாமதான்யா அவுங்கள பத்திரமா பாத்துக்கணும்.

இப்போ ,சிக்னல் இல்லாத கிராசிங் வெண்ணிலா கபடிக்குழு வெளயாடப்போறாங்க. திடுதிப்புன்னு கிராஸ் பண்ணுவாங்க .நகர்ந்து போற வண்டிகளுக்குள்ள பூந்து வந்து ,உங்க கார் பான்னட்ல தாளம் போட்டுட்டு,அந்த பக்கம் போய்டுவாங்க.நல்ல வெளயாடுங்கய்யா...

ஆனா ஒண்ணு..இருக்கறதிலேயே, ரொம்ப டேஞ்சர் இந்த 'மொபைல் மாமு" . இவர் கைல ஒரு செல் போன வெச்சு பேசிக்கிட்டே, தரைய பாத்து தான் , கிராஸ் பண்ணுவார் . (ஏன்யா, தரைக்குள்ளயா போகப்போறே?). இவர் போன்' ஒபாமாவோட பேசி ஆப்கான் பிரச்சினைய முடிச்சப்புறம் தான் ,ரோட்ட பாக்க வாய்ப்பு இருக்கு. So, இவரையும் நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

அது சரி.

போதும்யா சாமி . இவ்ளோ பேர  'பத்திரமா பாத்துக்க' , நான் என்ன கிருஷ்ணா பரமாத்மாவா ?  இல்ல, கார்னியர் பிருக்டிஸ் ஷாம்பூவா ?

நீங்களே ,இவங்கள பத்திரமா பாத்துக்கங்க ! நான் ,பேசாம MTC சொகுசு பஸ்ல போய்க்கிறேன்.

 

************************

1 comment:

  1. இந்த கட்டுரையை படிக்கும்போது என் வீட்டில் தாயார் தவிர யாரும் இல்லை. நான் குலுங்கி குலுங்கி சிரிப்பது கேட்டு என்னை ஒருமாதிரியாக பார்த்து என்னப்பா ஆச்சு என்று ஒருமுறை கேட்டுவிட்டு விலகிசென்றுவிட்டார். தொடர்ந்து எழுதினால் நன்றாக வருவீர்கள்.

    ReplyDelete