Aug 29, 2012

பத்திரமா பாத்துக்கங்க…


எனக்கு கார் ஓட்டறதுன்னாலே அலர்ஜி சார் !

லைசென்ஸ் வாங்க, ஒட்டி பழகியதோடு சரி. என்னால "8" எல்லாம் போட முடியல சார். நீளமா, ஒரு "1" மட்டும்தான் போடமுடிஞ்சது. எப்படியோ, GST ரோட்டில நேரா, 200 மீட்டர் காரை ஓட்டி காட்டி, லைசென்சும் வாங்கிட்டேன். நான் கார் ஒட்டி பழகிய நாட்களில் நான் ரோடுல பார்த்த சில பாதசாரிகள், என்னை ஒரு முக்கியமான முடிவு எடுக்க வெச்சாங்க.அந்த "எந்தரோ மகானுபாவு"க்களை இந்த கட்டுரையில நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போறேன்.

மொதல்ல, Mr.எதிர்.

இவருக்கு எவ்ளோ Traffic இருக்கற ரோட்டையும் கிராஸ் பண்றது பெரிய பிரச்சினையே இல்ல சார். இவர பொருத்தவரைக்கும், ரோடு எப்பவுமே காலியாத்தான் இருக்கும்.ஏன்னா, இவரு வண்டிங்க வர்ற Direction-க்கு நேர் எதிர் Direction-ல பாத்துக்கிட்டு தான் கிராஸ் பண்ணுவார்.உங்க வண்டி ஹாரன் எல்லாம் இவர ஒண்ணும் பண்ணாது. அவர் பாட்டுக்கு எதிர்ப்பக்கம் ரோட்ட பாத்து , 'தேமே'ன்னு போய்க்கிட்டே இருப்பார் . நீங்க தான் இவர,"பத்திரமா பாத்துக்கணும்".

இன்னும் கொஞ்ச தூரம் போனீங்கன்னா, அட்டாக் பாண்டியை  பாக்கலாம்.  வண்டி வர்ற வரைக்கும் ,ரோட்டோரம் நின்னுகிட்டு, வானத்த வெறிக்கும் இவர்,வண்டி கிட்டே வந்தவுடன்,பாய்ஞ்சு கிராஸ் பண்ணுவார்.உங்க ஹார்ட் ஒழுங்கா வேலை செய்யுதான்னு இதுக்கப்புறம் ,உங்களுக்கு தெரிஞ்சுடும் . நீங்க தான் இவரை "பத்திரமா பாத்துக்கணும்".

அப்புறம் வர்ற, இந்த மதில்மேல பூனை , ரொம்ப ஆபத்தான குருப் . இந்த Category ஆளுங்க ,ரோட பாதி கிராஸ் பண்ணிட்டு ,அப்பிடியே நடுரோட்ல நின்னிடுவாங்க.அப்புறம் உங்க பாடு திண்டாட்டம்தான்.நீங்க பிரேக்கை அடிக்கலாமா,வேணாமான்னு யோசிக்கும்போது , இந்த மனுஷன் ,ரோட்டை கிராஸ் பண்ணிடலாமா ,வேணாமான்னு டாஸ் போட்டு பார்த்துக்கொண்டிருப்பார். நீங்க வெறுத்துப்போய் ,பிரேக்கை அடிச்சிட்டு  பார்த்தா ….. நடு ரோட்ல நின்னுகிட்டு இவிங்க பண்ற காமெடி இருக்கே... சில பேர் ரோட்ல ஏதோ சாவிய தொலைச்சிட்டு தேடறா மாதிரி திரு திருன்னு முழிப்பாங்க. சிலர்,உங்களில் யார் பிரபுதேவா?” டான்ஸ் ப்ரோக்ராம்  பண்ண வந்தா மாதிரி, இந்த பக்கமா அந்த பக்கமான்னு Dance ஆடுவாங்க. சில பொம்பளைங்க , ஏதோ Miss. Universe பட்டம் ஜெயிச்சுட்டா மாதிரி, -ன்னு சிரிப்பாங்க. (எனக்கு இடுக்கண். உங்களுக்கு நகுக? நல்லா இருக்கும்மா…)சில கோவக்கார விருமாண்டிங்க, சந்தனம் ,குங்குமம் மாதிரியான மங்களகரமான வார்த்தைகளால, நம்மள திட்டிட்டு போவான்“Be careful!” -னு வடிவேல் மாதிரி ,நமக்கு நாமளே சொல்லிட்டு போக வேண்டியதுதான் .

சில பேர் கடவுள் மாதிரி , திடீர்னு வருவாங்க.வலது கையை தூக்கி, அருளாசி மாதிரி காட்டிகிட்டு ,ரோட கிராஸ் பண்ணி, போய்க்கிட்டே இருப்பாங்க. டேய், நில்டா ! நீ கையை காட்டின உடனே என்ஜின் என்ன ஆட்டோமேடிக்கா  ஸ்லோ ஆய்டுமாடா? என்ன தைரியம்?

 ஒண்ணும் பண்ணமுடியாது.இவரையும் நீங்க தான் "பத்திரமா பாத்துக்கணும் "

இப்ப ரோடுக்கு நடுவில Median- நின்னுகிட்டு இருக்கறது Mr.மகா விஷ்ணு  . கையில ஒரு சைக்கிள வெச்சுகிட்டு இந்தபக்கம் ஒரு Wheel ,அந்த பக்கம் ஒரு Wheel-னு  சிக்கலா நிப்பார்  இவர். கையில சக்கரத்தோட, அசப்புல உங்களுக்கு மஹாவிஷ்ணுவ பாத்தாப்பல இருக்கும்.கொஞ்சம் அசந்தா,சைக்கிள் வீலாலேயே கார் ப்ரீயா கோடு போட்டு கொடுப்பாரு. "பத்திரமா பாத்துக்கணும்".

அடுத்து வர்றவர், Alphabet Lover . இவருக்கு ரோட்ட, நேரா கிராஸ் பண்ணி அலுத்து போச்சு ! Z மாதிரி, J மாதிரி, S மாதிரி-ன்னு விதவிதமான Shape- இவர் ஓடி , ரோட்ட கிராஸ் பண்ணுவார். இவரையும் , நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

இந்த சிக்னல் மதியான் இருக்காரே, ரொம்ப ஸ்வரசியமானவர். சிக்னல் Green போட்டு ,வண்டியெல்லாம் நகர ஆரம்பிச்சதும், திபுதிபு-ன்னு ஓடி, வண்டிங்களுக்கு உள்ள பூந்து கிராஸ் பண்றது இவருக்கு ,ஒரு த்ரில்லிங்கான ஹாபி. நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

அப்புறம் வயசான தாத்தா பாட்டிங்க ....பாதி பேருக்கு ஹாரன் சத்தம் கேக்காது ....கண் கோளாறு இருக்கலாம் .(Oh..இது காரா? ? பாத்து வரக்கூடாதா தம்பி? ) நாளைக்கு நமக்கும் இதே நெலம தான் . நாமதான்யா அவுங்கள பத்திரமா பாத்துக்கணும்.

இப்போ ,சிக்னல் இல்லாத கிராசிங் வெண்ணிலா கபடிக்குழு வெளயாடப்போறாங்க. திடுதிப்புன்னு கிராஸ் பண்ணுவாங்க .நகர்ந்து போற வண்டிகளுக்குள்ள பூந்து வந்து ,உங்க கார் பான்னட்ல தாளம் போட்டுட்டு,அந்த பக்கம் போய்டுவாங்க.நல்ல வெளயாடுங்கய்யா...

ஆனா ஒண்ணு..இருக்கறதிலேயே, ரொம்ப டேஞ்சர் இந்த 'மொபைல் மாமு" . இவர் கைல ஒரு செல் போன வெச்சு பேசிக்கிட்டே, தரைய பாத்து தான் , கிராஸ் பண்ணுவார் . (ஏன்யா, தரைக்குள்ளயா போகப்போறே?). இவர் போன்' ஒபாமாவோட பேசி ஆப்கான் பிரச்சினைய முடிச்சப்புறம் தான் ,ரோட்ட பாக்க வாய்ப்பு இருக்கு. So, இவரையும் நீங்கதான் பத்திரமா பாத்துக்கணும்.

அது சரி.

போதும்யா சாமி . இவ்ளோ பேர  'பத்திரமா பாத்துக்க' , நான் என்ன கிருஷ்ணா பரமாத்மாவா ?  இல்ல, கார்னியர் பிருக்டிஸ் ஷாம்பூவா ?

நீங்களே ,இவங்கள பத்திரமா பாத்துக்கங்க ! நான் ,பேசாம MTC சொகுசு பஸ்ல போய்க்கிறேன்.

 

************************

Aug 26, 2012

கிலி மார்க்கெட்டிங்


காலை மணி பத்து. ஆபீஸ் பரபரப்பில் நான் .


என் செல்போன் சிணுங்கியது.


“குட் மார்னிங் சார் “… என்று ஒரு குயில் என் பெயரை சொல்லி செல் போனில் குழைந்தது.

"எஸ்...இட்ஸ் மீ ..ஸ்பீக்கிங்" ... என்றேன் பெருமையாக.


“சார், We are calling from UCICI Brudancial Insurance company சார்...”



ச்சே! காலங்காத்தாலேயே இன்சுரன்சா? இறைவா, இந்த துயரத்திலேந்து மீளரதுக்கு ஏதாவது பாலிசி


இருக்கா? - என்று நினைத்துக்கொண்டு, பதில் சொன்னேன்.


“இல்ல மேடம் ...தேங்க்ஸ்”.



மணி 10.40 : Sir, we are calling from BDHC home loan .Loan கொடுக்கறோம் சார். வீடு ஏதாவது வாங்கற பிளான் இருக்கா சார்? 

(ஆமாம் .இருக்கு.போயஸ் கார்டன்ல பத்து மாடி வீடு வாங்கணும், ஒரு அம்பது கோடி லோன் கெடைக்குமா ? ச்சே,என்ன ஒரு டிஸ்டர்பன்ஸ்)


“இல்ல மேடம்...தேங்க்ஸ்”.

மணி 11.50 : “Sir, we are from VXP Properties ...மதுரந்தகத்துக்கு பக்கத்துல, உகாண்டாவில பிளாட் போட்டருக்கோம் . 30 minutes journey from NH road (ப்ளைட்' லயா?) Free registration...Free site visit இருக்கு சார்.

(ஏன், ப்ரீ'யா எனக்கு ஒரு பிளாட்டும் வாங்கி கொடுத்துடுங்களேன்?)


“இல்ல மேடம்...தேங்க்ஸ்”


மணி 12.20 : சார்... ‘குட்டி பாங்க்’லேந்து பேசறோம்.பர்சனல் லோன் எதாவது வேணுமா சார்? நீங்க Payslip ,Pan card copy கொடுத்தா போதும் சார். அப்புறம் வீட்ட ஜப்தி பண்ற வரைக்கும் எல்லாத்தையும் நாங்க பாத்துப்போம். 10 Lacs வரைக்கும் தர்றோம் சார்.


“இல்ல மேடம்...தேங்க்ஸ்”.

மணி 1.15 : Lunch time .

“Sir ,We are calling from ‘Taxis bank’ credit card department.. இந்த மாசம் 12-ஆம் தேதி, நீங்க செலவு பண்ண 7,300 ரூபாய ,easy installment-ல, நாங்க 16,000 ரூபாயா மாத்தி தர்றோம்...


“இல்ல மேடம்...தேங்க்ஸ்”.


மணி 2.05: சிணுங்கிய போனை எடுத்த உடன் ,ஒரு நல்ல பாட்டு. அடடே..யார் இந்த மகராசி ? போன் பண்ணிட்டு அவங்களே பேசிட்டு இருக்காங்களே? அட..Recorded voice! "இந்த tune -அ உங்க காலர் ட்யுனா செட் பண்ண * மற்றும் 9-ஐ பிரஸ் செய்யவும். கட்டணங்களுக்கு உட்பட்டது" .


Cut ! ச்சே...என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?


மணி 2.35: சார்..நாங்க ... "அதோகதி பினான்ஸ் கம்பனி" லேந்து பேசறோம். ஒரு Systematic Investment Plan இருக்கு .நீங்க கொஞ்சம் கொஞ்சமா, மாசா மாசம் பணம் போட்டா போதும். நாங்க அத அஞ்சு வருஷத்துல பாதியாக்கி தர்றோம்.

இல்ல சார்...தேங்க்ஸ்”.


மணி 3.45 : மறுபடி செல் ஒலித்தது. எடுத்தால் மீண்டும் ஒரு pre-recorded voice.


”Fish TV presents exciting recharge offer.168 Channels –south package 160 Rupees” என்று அலறியது. (அடிங்...கொய்யால ...பிச்சுபுடுவேன் பிச்சி..). Cut!


மணி 4.10 : இம்முறை போனில் ,ஒரு ஆண் குரல் .


”சார், வி ஆர் கால்லிங் ப்ரம் " குடாக் தஹிந்திரா பேங்க்" .


“Saving ஏதாவது பண்ற பிளான் இருக்கா?” (இல்ல... Shaving தான் பண்ணனும்.வந்து பண்ணி உடுவீங்களா?)


“இல்ல சார்...தேங்க்ஸ்”.


மணி 5.20 : பாயல் மந்தரம் இன்சூரன்ஸ் கம்பெனி calling... “நான் ஏற்கனவே சொல்லிட்டனே ..எனக்கு வேணாம்.



இல்ல மேடம்...தேங்க்ஸ்”.


மணி 5.55 : கார் இன்சூரன்ஸ் தேவைப்படுமா சார்?

(மொதல்ல கார் ஒண்ணு தேவை...வாங்கித்தரீங்களா?)


“இல்ல மேடம்...தேங்க்ஸ்”.


மணி 6.30: Back to home.


வீட்டுக்கு வந்து உக்காந்ததும் ,மனைவி கேட்டாள்.



"காபி சாப்படரீங்களா"


“இல்ல மேடம் ....தேங்க்ஸ்”



மனைவி என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.



*********************************************************









பின் குறிப்பு:



இந்த கொடுமயிலேந்து மீள,நான் பண்ண Idea என்னான்னா .... வர்ற எல்லா Marketing நம்பரையும் Save பண்றதுதான் .

ஒரு வாரம் வர்ற எல்லா இன்சூரன்ஸ் காலையும் Reject பண்ணிட்டு சந்தோஷமா குடும்பம் நடத்தினேன்....அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

வெட்ட வெட்ட முளைக்கற அசுரன் மாதிரி, வேற நம்பர்லேந்து போன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கய்யா ...

நொந்து நூடுல்ஸ் ஆன இந்த நந்துவின் அட்வைஸ் என்ன தெரியுமா?

Free gift, குலுக்கல் gift - ன்னு, எந்த கடையும் ஒரு Form நீட்டினா, அலஞ்சிண்டு, உங்க மொபைல் நம்பர fill up பண்ணாதீங்கோ ! உங்களுக்கு கெடைக்கபோற பம்பர் பரிசு ,இந்த கொடும தான் !

இன்டர்நெட்- Social / antisocial network மற்றும் எந்த வெப் சைட்-லயும் மொபைல் நம்பர கொடுத்திடாதீங்க...



ஆனா ஒண்ணு....தப்பித்தவறி கூட ,TRAI சட்டப்படி ,"Do Not Disturb " ல மட்டும் register பண்ணிட வேணாம். ஏன்னா...



அதுக்கு அப்புறம் தான் எனக்கு நெறைய Calls வந்துது !

Aug 23, 2012

இளமையில் கல்


எரும.. எரும ....

அலுவலகம் முடிந்து ,வீட்டுக்குள் நுழையும்போதே , உள்ளே பெரும் சத்தம். மனைவியின் வெண்கலக்குரல் . "அறிவில்ல ? எரும.."...

பிறக்கும்போதே BOSE  சவுண்ட் சிஸ்டத்தை முழுங்கியிருப்பாளா?

வீட்டுக்குள்ளே நுழைந்து பார்த்தால் , நல்ல காலம்.அந்த எருமை நான் இல்லை.என் செல்ல மகள் அம்மாவிடம் பாடம் படிக்கிறாள் ! அய்யஹோ... என் செல்லத்தயா இவள் இப்படி வதைக்கிறாள் ? ஹால் முழுவதும் பேப்பரும் ,பென்சிலும்,புத்தகமுமாக ,வீடே சூறையாடப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மாதிரி இருக்கிறதே? என் மகள் இப்போது நான்காம் வகுப்பு தான் படிக்கிறாள்.ஆனால் , ஏதோ நாசா மையத்தில், ராக்கெட்டில் கோளாறு மாதிரி ,மண்டையில் கை வைத்துக்கொண்டு பரிதாபமாக அமர்ந்திருந்தாள். வெகு நாட்களுக்கு முன் பார்த்த பாக்யராஜ் படம் எனக்கு ஞாபகம் வந்தது. "காந்திஜி ,காந்திஜி..." என்று ஒரு ஹிந்தி பண்டிட் காதை திருகும் அந்த காட்சி,கண் முன்னே வந்து போனது !

 இந்த கலவரத்துக்கு காரணம் அறிய விழைந்து மெல்ல மனைவியை நோக்கினேன். அலுவலகம் சென்று திரும்பிய எனக்கு மிகவும் அசதி..அதிகம் பேச எனக்கும் தெம்பு இல்லை. மேற்கொண்டு ,எனக்கும் மனைவிக்கும் நடந்த சம்பாஷனை மணிரத்னம் படம் மாதிரி..

"என்ன ?" .

"யூனிட் டெஸ்ட்"

"எப்போ?"

"நாளைக்கு"

" ஏன்?"

"கவனமே இல்ல"

"திட்டாத"

"நீங்க சொல்லிகொடுங்க"

" " (அமைதி )

"நகர்ந்து போ" என்று ஒரு அசரீரி ஒலிக்க ,மெல்ல விலகினேன் .இன்று காபி ,தண்ணி எதுவும் கிடைக்காது . டிரஸ் மாற்றிக்கொண்டு வந்து ஹாலில் உட்கார்ந்து , மகள் படிக்கும் அழகை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஆஹா ..தமிழ் பாடம் !

அடடா... இலக்கணம் ! பலே.

 

செய்யுளின் அழகை விவரிப்பது   Dash

யாப்பு பற்றி கூறுவது Dash

“Dash” “Dash” என்று மனைவி சொல்ல சொல்ல ...பதில் சொல்ல என் மகள் கடமை பட்டிருந்தாள்.


அடுத்த நிகழ்ச்சி , சயின்ஸ்  .

மீண்டும் .. DASH… DASH…
இப்போது அற்புதமாக, TRUE OR FALSE கேள்விகள். கேள்வி கேட்கும் முன்னே, மகள் TRUE,FALSE என்று பதில் அளித்துக்கொண்டே போகிறாள். இம்முறை , தாயிடம் இருந்து பாராட்டு….VERY GOOD.

பின்னர் ,ANSWER IN ONE WORD. GIVE SHORT ANSWER. ANSWER IN DETAIL என்று வரிசையாக மல்யுத்தம் தொடர்ந்தது.

இந்த"சித்தார்த்த பாசு" quiz program முடிந்தது, ஒரு வழியாக மகள் விடுதலை ஆனாள்.

மெல்ல மகளிடம் கேட்டேன் ...

ஏய்ய் ..செய்யுள் என்றால் என்ன?”

மகள் சொன்னாள்.

-"அதெல்லாம் portion -ல கெடயாது.

அட ராமா !

*************************