Jun 9, 2013

குண்டு


குண்டாக இருப்பவர்கள் நல்லவர்கள். சந்தோஷமாக இருப்பவர்கள் .
நான் கொஞ்சம் குண்டுதான் .ஆனால் ,சந்தோஷம்??
இல்லை .
என்னை இந்த சமுதாயம் ஏன் சந்தோஷமாக இருக்க விடவில்லை ?
எத்தனை எகத்தாளம்? எத்தனை அட்வைஸ் ? என்ன நமுட்டு சிரிப்பு ?
இதோ...தினசரி ,என்னை சீண்டும் சமூகமும், அதன் பின்னர்  எனக்குள் எழும் (உள்மனக்குரலும்)....

கற்பனை அல்ல.. நிஜம் சுவாமி.
படித்துவிட்டு, நீங்களும் சிரியும் !

உறவினர்: என்ன... ஒரு சுத்து பெருத்துட்டா மாதிரி இருக்கு?
(நீங்க  கூட கறுத்துட்டா மாதிரி இருக்கு L...மூஞ்சிய பாரு ! போவியாம் ...)

நண்பர்: வெயிட் எவ்ளோ சார்?
(ஏன்...என் வெயிட் தெரிஞ்சு என்ன ஜெனரல் நாலட்ஜ் வளத்துக்க போறியா?...போய்யா)

டாக்டர் : கொஞ்சம் வெயிட் கம்மி பண்ணுங்க.. காலைல வாக்கிங் போங்க.
(நீங்க மட்டும் என்னவாம் ?பப்ளிமாஸ் மாதிரி  இருந்துகிட்டு...நீங்களும் காத்தால வாங்க.. பழகலாம்)

துணிக்கடை: 4XL டீ –ஷர்ட்’லாம் எங்க கடையில இல்ல சார்...
 (WHY? WHY?  ஏன் இல்ல??  ‘நவ்த்தால்’ பூட்டு இருக்கா??  கடைய பூட்டிட்டு போ!நாங்க என்ன துணி வாங்கியாடா, டீ ஷர்ட் தெச்சிக்கறது?நல்ல கடை!)

மாம்பலம் பிளாட்பாரம்: பெர்முடா’வா ??...உங்களுக்கா ?
(பின்ன என்ன? உனக்கு தீபாவளிக்கு வாங்கிக்கொடுக்கவாடா நான் வந்திருக்கேன்?)

செருப்பு கடையில்: இதுதான் ‘மேக்ஸிமம்’ சைஸ் சார் ! உங்க கால் கொஞ்சம் விட்த்’ சார். போட போட சரியாய்டும் .
(எது? என் கால் விட்த்’தா?? போயும் போயும் ,உன் கடையில் வாங்க வந்தேனே,என்னை....வேணாம் ....வேற கடைக்கு போய் வாங்கி அடிச்சிக்கறேன்)

மனைவி : இனிமே, ராத்திரில கஞ்சி குடிங்க .
(தோசைக்கு முன்னாலயா ,பின்னாலயா??..வெவ்வே ...இந்த பஜன எல்லாம் இங்க வேணாம் ..போய் அடுப்ப மூட்டு)

கசின்:வெயிட் போட்டுட்ட’டா...ஆபீஸ்ல உக்காந்தே இருப்பியா ?
(பின்ன என்ன, லேப்டாப்’ப  கழுத்தில கட்டிண்டு ஓடிண்டே இருக்க சொல்றியா? வந்துட்டான்.... )

SMS in Mobile : Try Sauna Belt- reduce your belly ....call now.
(இந்த மெசேஜ டெய்லி‘யாடா அனுப்புவ??..மவனே, அந்த பெல்ட்’ட வாங்கி முதல்ல ஒன்ன பொளக்கறேண்டா)

ஞாயிறு -வீட்டுவாசலில் விழுந்து கிடந்த நோட்டிஸ்: Stay fit.... join our Fitness Center today!
(பக்கத்து வீட்ல நோட்டிஸ் போடல??? ...இங்க மட்டும் ஏண்டா போட்ருக்கே?? குறி வெச்சி போடறீங்களா’டா?) 

டெய்லர்: சார் ...அடுத்த முறை பேண்ட் துணி வாங்கும்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாங்குங்க சார்...
(ஏன்டா? சின்னதா ‘ப்ரோட்டோ டைப்’ செஞ்சு முன்னாடி சாம்பிள் கொடுப்பியா ? வந்துட்டான் ...பெரிய டெய்லர் !)

இன்னும் பலர்...

என்னை  பார்த்து ,பின்  வண்டியை நிறுத்த யோசித்த ‘ஷேர் ஆட்டோ’க்காரன்  .(இரண்டு டிக்கட் போடலாமே?)
ட்ரெயினில் என்னை பார்த்தவுடன் ,எங்கே நகர சொல்லிவிடுவானோ என்று ,காலை அகட்டி உட்கார்ந்து கொள்ளும் ஓர சீட் கண்ணியவான்கள் .
கல்யாண பந்தியில் ,என்னை  பார்த்தும், பார்க்காததுபோல, பயந்து போகும் பரிமாறும் ஆட்கள் .(காய் ,கூட்டு காலியாடுமா ?)
என்ன சமுதாயம் இது ?

‘தனி ஒரு குண்டனுக்கு நிம்மதி இல்லையெனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம்’ என்று பாட ஒரு பாரதி இல்லையே? அட்லீஸ்ட், ஒரு விஜய டி ராஜேந்தர் ?
போதும் சார் !

நான் நிறைய ஒன்றும் சாப்பிடுவதில்லை. .... ஆனால், நிறைவாக சாப்பிடுகிறேனோ ? தெரியவில்லை. சில நாள் ராத்திரியில் கஞ்சி கூட சாப்பிட்டிருக்கிறேன். சரிப்படவில்லை. ஒரு நாள் , எட்டு மணிக்கு கஞ்சி குடித்து, பின்னர் பத்தரை மணிக்கு மறுபடியும் வயிற்றில் வெஸ்டர்ன் மியூசிக் மாதிரி “ஊ ... ” என்று சத்தம் கேட்டு நான் பயந்துபோய் வயிற்றை தடவ ..... மனைவி திட்டிக்கொண்டே தோசைக்கல்லை போட்டாள். கஞ்சி காவியம் அன்றே இனிதுடன் முடிந்தது.
வாக்கிங் போனால்  மூச்சு முட்டுகிறது. பத்து வருடம் முன்னால் ஒரு சிறிய ஆக்சிடண்டில் உடைந்த இடது கால்.எனவே ,கால் வலி உபாதை வேறு. ‘நடக்கற’ காரியம் இல்லை.
சில நாள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஸ்விம்மிங் கூட போனேன். தண்ணியில் ‘அக்கடா’ என்று படுத்துக்கொண்டிருப்பது எத்தனை சுகம்?. ‘எந்த ஒலிம்பிக் மெடல் வாங்க இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக போய் வருகிறார்கள்? ‘என்று ஸ்விம்மிங் பூலில் அடுத்தவர்களை பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.அங்கேயும் ,தண்ணீர் க்ளோரின் வாசனை ஒத்துக்கொள்ளவில்லை .தொடர் தும்மல். ஒரு காரணம் கிடைத்துவிட்டது. விட்டாயிற்று.
டிவியில் வெள்ளைக்காரன்  ஓட்டியதை பார்த்து மயங்கி, நான் வாங்கிய ‘ஆர்பிட்ரக் எலைட்’ என்னும் இயந்திரம், எண்ணி ஐந்து நாட்கள் மட்டுமே ஓடியது . பின்னர், சில நாள் அது என் பனியன் ஜட்டி காயப்போட உதவியது .இப்போது மனைவி தூசு படாமல் இருக்க ,அதன்மேல் ஒரு பெரிய போர்வையே போர்த்தி விட்டாள். அதற்கு மாலை போட்டு,நெத்தியில் ஒத்தை ரூபா வைக்காதது மட்டும்தான் குறை.
சரி விடும்.
அடியே ...நைட் என்ன சமையல் ???

Jun 3, 2013

இண்டியன் ப்ராப்ளம் லீக்


ஜம்பிங் ஜப்பாங்.... ஜம்பிங் ஜப்பாங்.... கிலி கிலியே !
வெல்கம் டு எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் டி ட்வெண்டி .

ஆஹா ...அற்புதம்’ டா ! சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெர்சஸ் ராயல் சேலஞ்சர்ஸ்.  நவ்ஜோத் சிங் சித்து ஸ்டுடியோ மே ஆ கயா ஹை ! .
தண்ணி பாட்டில், கால் வைக்க மினி ஸ்டூல் ,ரிமோட் சகிதம் நான் என் ஆஸ்தான ஈஸி சேரில் மைக்கேல் ஹஸ்ஸி’யை எதிர்பார்த்து, ஆவலுடன் அமர்ந்தேன். இன்று “க்ரிஸ்  கெய்ல்” என்ன சாப்பிட்டு இருப்பான்? என்று யோசித்து சற்றே டென்ஷனாக ஆரம்பித்தேன்.
 “ஜப் ச்சாயல் கோ ஹாய் ஜாத்தா ஹை, வொ ஹமாரா பஜாஜ் ஹோத்தா ஹை” ....சித்து என்னமோ ஹிந்தியில் சொல்கிறான் ... எல்லாரும் “வாஹ் வாஹ்” என்று பாராட்டுகிறார்கள்.பின்னர் ஸ்டுடியோ  அழகிகள் ஒரு கெட்ட ஆட்டம் போடுகிறார்கள். நரைச்ச முடி ஜடேஜா, தஞ்சாவூர் பொம்மை மாதிரி  தலை ஆட்டுகிறான். “மேட்ச் அபி குச்சி தேர் மெ ஷுரு ஹோநெவாலா ஹை” என்கிறான் அந்த கோட்டு கோபி. சரி! சென்னை பர்ஸ்ட் பேட்டிங் ! சூப்பர்பு.
என்னதான் டிவியில் ஆயிரம் சூப்பர் சிங்கர் ,மானாட மயிலாட மற்றும்  சீரியல்கள்  வந்தாலும் மேட்ச் பார்ப்பது மாதிரி வருமா?
ரவிசாஸ்திரியும்  வெங்க்சர்க்காரும் வெள்ளை சட்டை போட்டு, ஐந்து நாள் டொக்கு போட்டதையே வெறியாக பார்த்தவன் நான் .இப்படி கலகலப்பாக தோனியும் , கலர்புல்லாக சியர் லீடரும் ஆடுவதை பார்க்க, கேட்கவா வேணும்?  வெல்லம்!
“கொஞ்சம் விஜய் டிவி போடுங்க !” பின்னாலிருந்து வந்த அந்த அசரீரியை நான் காதில் விழாத மாதிரி உதாசீனம் செய்தேன்.
மனைவி !
“எப்பப்பாத்தாலும் என்ன கிரிக்கட்டோ ? ரிமோட் எங்கே?” என்ற அவள் கேள்வி,என் சந்தோஷம் முடிவுக்கு வந்ததை  உறுதி செய்தது .
“சென்னை சூப்பர் கிங்க்ஸ்’மா ....ஸ்ருதிஹாசன்’லாம் வருவாங்க” என்று சற்று கேவலமாக மார்க்கெட்டிங் கூட செய்து பார்த்தேன் . ம்ஹூம் ...வொர்க் அவுட் ஆகவில்லை.
“எப்பிடித்தான் உக்காந்து இத கண் கொட்டாம  பாக்கரீங்களோ?? மேட்ச்தான் இன்னும் ஆரம்பிக்கல இல்ல..அந்த ரிமோட்டை இப்பிடி கொடுங்க” என்று சீரியலுக்கு மாற்றினாள்.
சரியாக  மணி எட்டு ஆனதும், பாய்ந்து சென்று  ரிமோட்டை பிடுங்கி ‘செட்மாக்ஸ்’ வைத்தேன். என் சுவர் கடிகாரம் ஸ்லோ ! முதல் ஓவர்  முடிந்து அதற்குள் ‘முரளி விஜய்’ பெவிலியன் திரும்பி இருந்தான். நான் பார்த்திருந்தால்,இது மாதிரி அசம்பாவிதங்கள் நடக்க விட்டிருக்கமாட்டேன். மனைவியை கடிந்துகொண்டு , ரிமோட்டை லுங்கிக்குள் பதுக்கியபடி “இன்னும் மூன்று மணி நேரத்துக்கு டிவி என்து” என்று அக்கிரமம் செய்தேன். முறைத்தபடி எழுந்து போனாள் மனைவி..... அது! அங்கே மைதானத்தில் ஹஸ்ஸி ‘போடு போடு’ என்று போட்டுக்கொண்டிருந்தான். ச்சியர் லீடர்கள் சளைக்காமல் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆறு ஓவர் வரை, என் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது.
ஏழாவது ஓவரில் என் பாசக்கார மகள் அருகில் வந்தாள். சம்மர் ஹாலிடேஸ் ... அறுபது நாள் விடுமுறை ! கூட விளையாட, அக்கம் பக்கம் குழந்தைகள் இல்லை ..அவளுக்கு தெரிந்த ஒரே குழந்தை, சற்றே வயதான...பரிதாபமான .... நான் தான் !
“அப்பா ....ட்ரேட் வெளயாடலாமா?? கேரம் வெளயாடலாமா ?”
கத்தியா, துப்பாக்கியா? என்ன சோதனை இது ?
“கண்ணு.. நல்ல மேட்ச்’மா ! அப்பா நாளைக்கு வர்ரேன் வெளையாட...நீ போய் ஸ்டோரி புக் படியேன் ” என்றேன்.
“போப்பா ...நேத்திக்கும் இதேதான் சொன்னே “ 
அவள் அதிகம் negotiate  செய்வது இல்லை. “மேட்ச் பாக்க கூடாது!  என்று சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி தீர்ப்பு வழங்கி, பின்னர் ,ஜனாதிபதி மாதிரி, என் கருணை மனுவையும் நிராகரித்தாள். ட்ரேட் கேம் போர்டை  எடுத்துக்கொண்டு பெட்ரூமிற்க்கு என்னை திமிற திமிற, ஒரு குற்றவாளியை போல, தள்ளிக்கொண்டு போனாள்.இது பாகிஸ்தான் மனைவியின் உள்நாட்டு சதி வேலையாக இருக்கக்கூடுமோ என்ற ஐயத்துடன் எட்டிப்பார்த்தால் , ஒன்றுமே தெரியாத மாதிரி, கிச்சனில் அவள் வாணலியில் எதையோ கிண்டிக்கொண்டிருந்தாள்.
“ஹலோ ...கொஞ்சம் ..கொழந்தயோட வெளயாடேன்..
“எனக்கு வேலை இருக்கு..பகல் முழுக்க நான்தானே பாத்துக்கறேன் அவளை ?”
சே ! வேறு வழி இல்லை .... மனைவி வந்து சேனல் மாற்றிவிட்டு, ரிமோட்டுக்கு தற்காலிக ஒவ்னராக தன்னை பிரகடனம்  செய்துகொண்டாள். கிச்சனிலிருந்தபடி, ஆனந்தமாக சீரியல் பார்க்க ஆரம்பித்தாள். சற்றே காதில் புகை விட்டபடி, நானும்  நகர்ந்து போனேன்.
வேறு வழி இன்றி ,பெட்ரூமிற்கு போய்  நானும் குழந்தையுடன்  “ட்ரேட்” ஆட ஆரம்பித்தேன்.ஊர்களை வாங்குவோமாம் .வீடு கட்டுவோமாம்.சரி சரி இந்த அபத்தத்தைத்தானே நாம் சிறுவனாக இருக்கும்போது விளையாடினோம்?ஆனாலும் இந்த வயதில், எனக்கு சற்றே கஷ்டம்தான்! மனம் முழுக்க மேட்சில்!
ஒரு மணி நேரம் போச்சு...மும்பை ,பெங்களூர்,சென்னை என்று ஊர்களை அவள் வாங்கி மகிழ ,எனக்கு மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங் என்று ஐபிஎல் டீம்கள் நினைவுக்கு வந்து போனது.  நடுவில் போய் ஸ்கோர் பார்த்து வருவோமா  என்று நைசாக நகர விழைந்தேன்.
“கொஞ்சம் இருமா...அப்பா போய் தண்ணி குடிச்சிட்டு வரேன்”
“ஓகே பா...ஆனா நேரா இங்க திரும்பி வா ..டிவி கிவி போடாதே !”
கிங்கரி!  எனக்கு தண்ணி வேண்டாம்.
தோனி வந்திருப்பானோ? அவள் சாப்பிடும் நேரம் வந்தது . அப்பாடி! 
சாதம் ஊட்டிவிட அம்மா வந்தாச்சு. நைசாக நகர்ந்து ஹாலுக்கு போய் டிவியை போட்டேன்.மேட்ச் முதல் இன்னிங்க்ஸ் முடிந்துவிட்டது .தோனி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறான்.நல்ல அடி...மிஸ் செய்துவிட்டோமே ?என்று என்னை நானே நொந்தபடி,மீண்டும் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் பார்க்க ஆரம்பித்தேன். .அதே ஜம்பிக் ஜபாங் ...அதே சித்து.  பொறுமை தேவை .ஹா...இதோ எந்தன் “கெய்ல் படவா”!  மேட்ச் ஆரம்பித்து விட்டது.சென்னை போவ்லர்கள் கெய்லை பார்த்து, முருகனையும் முத்துமாரி அம்மனையும் வேண்டிக்கொள்கிறார்கள். ஆனந்தமாக மேட்ச் பார்க்க ஆரம்பித்தேன். முதல் ஆறு ஓவர்கள்  பார்ப்பது கவிதையின் சுகம்.
சரியாக மேட்ச் ஆரம்பித்து, பத்து நிமிடத்தில் மகள் வந்து,பாதியில்  விட்ட பிசினஸ் கேமை நினைவு கூர்ந்தாள்.
என்ன பெரிய டெக்ஸ்டைல் பிசினஸா? ...
“இன்னும் அரை மணி நேரம்’தான் வெளையாட்டு ....அப்புறம் ,சமத்தா தூங்கணும் ..சரியா?
“ஓகே பா....தூங்கறேன் ...நீ கதை சொல்வெல்ல? “என்று கண்ணடித்தாள்.
நாசமா போச்சு ! இன்னிக்கு மேட்ச் கோயிந்தா .
விளையாடி முடித்து பெட் போட்டு,கொசு வலை போட்டு, ,பார்பி கதை சொல்லி ...உஷ்.....அப்பாடா...மகள் தூங்காமல் என்னை பார்த்து இளித்து,இளித்து கடுப்பேத்திக்கொண்டிருந்தாள். மனைவியை ஏன் இன்னும் இந்த பக்கம் காணோம்? என்ற ஐயத்துடனே, மெல்ல மகளை தட்டியபடி தூங்க வைக்க முயன்றேன். அரை மணி நேரம் போச்சு. அப்பாடா ! ஒரு வழியாக மகள் தூங்கிவிட்டாள்.
மேட்ச்?
ஓடு ஓடு ....ஹாலுக்கு ஓடி வந்தால்... அங்கே,
கடைசி ஓவர்... மிகுந்த டென்ஷனுடன், டிவி பார்த்து , நகம் கடித்தபடி,
சென்னை ஜெயிச்சுருவாங்க போல இருக்கு?” என்று சிரித்தாள் மனைவி.

 ---------------------------------------------
பிகு :

சில நாள் கழித்து டிவியில் நான் பார்த்த செய்தி ‘கிலிகிலி’யே அளித்தது. IPL Spot Fixing  ஊழல் விவகாரம்!! பார்த்த அத்தனை பேரையும் பைத்தியக்காரன் ஆக்கிவிட்டு,நேரத்தை வீணாக்கி ...என்ன எழவுக்குடா இத்தனை நாள் இந்த “ஜம்பிக் ஜப்பாங்கு”??.ஞானோதயம் பிறந்தது .இனி ஐபிஎல் பார்க்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.
அடுத்த நாள் ஆபீஸ் போனால் ,நண்பர் ஹரி .... .” ஆமாங் ...சேம்பியன்ஸ் ட்ராபி எப்போ வருது சார்??” என்கிறார்.
பார்க்கலாமா .வேணாமா?  
பார்ப்பேன் .
கிரிக்கெட் சார் !