Jun 9, 2013

குண்டு


குண்டாக இருப்பவர்கள் நல்லவர்கள். சந்தோஷமாக இருப்பவர்கள் .
நான் கொஞ்சம் குண்டுதான் .ஆனால் ,சந்தோஷம்??
இல்லை .
என்னை இந்த சமுதாயம் ஏன் சந்தோஷமாக இருக்க விடவில்லை ?
எத்தனை எகத்தாளம்? எத்தனை அட்வைஸ் ? என்ன நமுட்டு சிரிப்பு ?
இதோ...தினசரி ,என்னை சீண்டும் சமூகமும், அதன் பின்னர்  எனக்குள் எழும் (உள்மனக்குரலும்)....

கற்பனை அல்ல.. நிஜம் சுவாமி.
படித்துவிட்டு, நீங்களும் சிரியும் !

உறவினர்: என்ன... ஒரு சுத்து பெருத்துட்டா மாதிரி இருக்கு?
(நீங்க  கூட கறுத்துட்டா மாதிரி இருக்கு L...மூஞ்சிய பாரு ! போவியாம் ...)

நண்பர்: வெயிட் எவ்ளோ சார்?
(ஏன்...என் வெயிட் தெரிஞ்சு என்ன ஜெனரல் நாலட்ஜ் வளத்துக்க போறியா?...போய்யா)

டாக்டர் : கொஞ்சம் வெயிட் கம்மி பண்ணுங்க.. காலைல வாக்கிங் போங்க.
(நீங்க மட்டும் என்னவாம் ?பப்ளிமாஸ் மாதிரி  இருந்துகிட்டு...நீங்களும் காத்தால வாங்க.. பழகலாம்)

துணிக்கடை: 4XL டீ –ஷர்ட்’லாம் எங்க கடையில இல்ல சார்...
 (WHY? WHY?  ஏன் இல்ல??  ‘நவ்த்தால்’ பூட்டு இருக்கா??  கடைய பூட்டிட்டு போ!நாங்க என்ன துணி வாங்கியாடா, டீ ஷர்ட் தெச்சிக்கறது?நல்ல கடை!)

மாம்பலம் பிளாட்பாரம்: பெர்முடா’வா ??...உங்களுக்கா ?
(பின்ன என்ன? உனக்கு தீபாவளிக்கு வாங்கிக்கொடுக்கவாடா நான் வந்திருக்கேன்?)

செருப்பு கடையில்: இதுதான் ‘மேக்ஸிமம்’ சைஸ் சார் ! உங்க கால் கொஞ்சம் விட்த்’ சார். போட போட சரியாய்டும் .
(எது? என் கால் விட்த்’தா?? போயும் போயும் ,உன் கடையில் வாங்க வந்தேனே,என்னை....வேணாம் ....வேற கடைக்கு போய் வாங்கி அடிச்சிக்கறேன்)

மனைவி : இனிமே, ராத்திரில கஞ்சி குடிங்க .
(தோசைக்கு முன்னாலயா ,பின்னாலயா??..வெவ்வே ...இந்த பஜன எல்லாம் இங்க வேணாம் ..போய் அடுப்ப மூட்டு)

கசின்:வெயிட் போட்டுட்ட’டா...ஆபீஸ்ல உக்காந்தே இருப்பியா ?
(பின்ன என்ன, லேப்டாப்’ப  கழுத்தில கட்டிண்டு ஓடிண்டே இருக்க சொல்றியா? வந்துட்டான்.... )

SMS in Mobile : Try Sauna Belt- reduce your belly ....call now.
(இந்த மெசேஜ டெய்லி‘யாடா அனுப்புவ??..மவனே, அந்த பெல்ட்’ட வாங்கி முதல்ல ஒன்ன பொளக்கறேண்டா)

ஞாயிறு -வீட்டுவாசலில் விழுந்து கிடந்த நோட்டிஸ்: Stay fit.... join our Fitness Center today!
(பக்கத்து வீட்ல நோட்டிஸ் போடல??? ...இங்க மட்டும் ஏண்டா போட்ருக்கே?? குறி வெச்சி போடறீங்களா’டா?) 

டெய்லர்: சார் ...அடுத்த முறை பேண்ட் துணி வாங்கும்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாங்குங்க சார்...
(ஏன்டா? சின்னதா ‘ப்ரோட்டோ டைப்’ செஞ்சு முன்னாடி சாம்பிள் கொடுப்பியா ? வந்துட்டான் ...பெரிய டெய்லர் !)

இன்னும் பலர்...

என்னை  பார்த்து ,பின்  வண்டியை நிறுத்த யோசித்த ‘ஷேர் ஆட்டோ’க்காரன்  .(இரண்டு டிக்கட் போடலாமே?)
ட்ரெயினில் என்னை பார்த்தவுடன் ,எங்கே நகர சொல்லிவிடுவானோ என்று ,காலை அகட்டி உட்கார்ந்து கொள்ளும் ஓர சீட் கண்ணியவான்கள் .
கல்யாண பந்தியில் ,என்னை  பார்த்தும், பார்க்காததுபோல, பயந்து போகும் பரிமாறும் ஆட்கள் .(காய் ,கூட்டு காலியாடுமா ?)
என்ன சமுதாயம் இது ?

‘தனி ஒரு குண்டனுக்கு நிம்மதி இல்லையெனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம்’ என்று பாட ஒரு பாரதி இல்லையே? அட்லீஸ்ட், ஒரு விஜய டி ராஜேந்தர் ?
போதும் சார் !

நான் நிறைய ஒன்றும் சாப்பிடுவதில்லை. .... ஆனால், நிறைவாக சாப்பிடுகிறேனோ ? தெரியவில்லை. சில நாள் ராத்திரியில் கஞ்சி கூட சாப்பிட்டிருக்கிறேன். சரிப்படவில்லை. ஒரு நாள் , எட்டு மணிக்கு கஞ்சி குடித்து, பின்னர் பத்தரை மணிக்கு மறுபடியும் வயிற்றில் வெஸ்டர்ன் மியூசிக் மாதிரி “ஊ ... ” என்று சத்தம் கேட்டு நான் பயந்துபோய் வயிற்றை தடவ ..... மனைவி திட்டிக்கொண்டே தோசைக்கல்லை போட்டாள். கஞ்சி காவியம் அன்றே இனிதுடன் முடிந்தது.
வாக்கிங் போனால்  மூச்சு முட்டுகிறது. பத்து வருடம் முன்னால் ஒரு சிறிய ஆக்சிடண்டில் உடைந்த இடது கால்.எனவே ,கால் வலி உபாதை வேறு. ‘நடக்கற’ காரியம் இல்லை.
சில நாள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஸ்விம்மிங் கூட போனேன். தண்ணியில் ‘அக்கடா’ என்று படுத்துக்கொண்டிருப்பது எத்தனை சுகம்?. ‘எந்த ஒலிம்பிக் மெடல் வாங்க இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக போய் வருகிறார்கள்? ‘என்று ஸ்விம்மிங் பூலில் அடுத்தவர்களை பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.அங்கேயும் ,தண்ணீர் க்ளோரின் வாசனை ஒத்துக்கொள்ளவில்லை .தொடர் தும்மல். ஒரு காரணம் கிடைத்துவிட்டது. விட்டாயிற்று.
டிவியில் வெள்ளைக்காரன்  ஓட்டியதை பார்த்து மயங்கி, நான் வாங்கிய ‘ஆர்பிட்ரக் எலைட்’ என்னும் இயந்திரம், எண்ணி ஐந்து நாட்கள் மட்டுமே ஓடியது . பின்னர், சில நாள் அது என் பனியன் ஜட்டி காயப்போட உதவியது .இப்போது மனைவி தூசு படாமல் இருக்க ,அதன்மேல் ஒரு பெரிய போர்வையே போர்த்தி விட்டாள். அதற்கு மாலை போட்டு,நெத்தியில் ஒத்தை ரூபா வைக்காதது மட்டும்தான் குறை.
சரி விடும்.
அடியே ...நைட் என்ன சமையல் ???

No comments:

Post a Comment