Aug 23, 2012

இளமையில் கல்


எரும.. எரும ....

அலுவலகம் முடிந்து ,வீட்டுக்குள் நுழையும்போதே , உள்ளே பெரும் சத்தம். மனைவியின் வெண்கலக்குரல் . "அறிவில்ல ? எரும.."...

பிறக்கும்போதே BOSE  சவுண்ட் சிஸ்டத்தை முழுங்கியிருப்பாளா?

வீட்டுக்குள்ளே நுழைந்து பார்த்தால் , நல்ல காலம்.அந்த எருமை நான் இல்லை.என் செல்ல மகள் அம்மாவிடம் பாடம் படிக்கிறாள் ! அய்யஹோ... என் செல்லத்தயா இவள் இப்படி வதைக்கிறாள் ? ஹால் முழுவதும் பேப்பரும் ,பென்சிலும்,புத்தகமுமாக ,வீடே சூறையாடப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மாதிரி இருக்கிறதே? என் மகள் இப்போது நான்காம் வகுப்பு தான் படிக்கிறாள்.ஆனால் , ஏதோ நாசா மையத்தில், ராக்கெட்டில் கோளாறு மாதிரி ,மண்டையில் கை வைத்துக்கொண்டு பரிதாபமாக அமர்ந்திருந்தாள். வெகு நாட்களுக்கு முன் பார்த்த பாக்யராஜ் படம் எனக்கு ஞாபகம் வந்தது. "காந்திஜி ,காந்திஜி..." என்று ஒரு ஹிந்தி பண்டிட் காதை திருகும் அந்த காட்சி,கண் முன்னே வந்து போனது !

 இந்த கலவரத்துக்கு காரணம் அறிய விழைந்து மெல்ல மனைவியை நோக்கினேன். அலுவலகம் சென்று திரும்பிய எனக்கு மிகவும் அசதி..அதிகம் பேச எனக்கும் தெம்பு இல்லை. மேற்கொண்டு ,எனக்கும் மனைவிக்கும் நடந்த சம்பாஷனை மணிரத்னம் படம் மாதிரி..

"என்ன ?" .

"யூனிட் டெஸ்ட்"

"எப்போ?"

"நாளைக்கு"

" ஏன்?"

"கவனமே இல்ல"

"திட்டாத"

"நீங்க சொல்லிகொடுங்க"

" " (அமைதி )

"நகர்ந்து போ" என்று ஒரு அசரீரி ஒலிக்க ,மெல்ல விலகினேன் .இன்று காபி ,தண்ணி எதுவும் கிடைக்காது . டிரஸ் மாற்றிக்கொண்டு வந்து ஹாலில் உட்கார்ந்து , மகள் படிக்கும் அழகை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஆஹா ..தமிழ் பாடம் !

அடடா... இலக்கணம் ! பலே.

 

செய்யுளின் அழகை விவரிப்பது   Dash

யாப்பு பற்றி கூறுவது Dash

“Dash” “Dash” என்று மனைவி சொல்ல சொல்ல ...பதில் சொல்ல என் மகள் கடமை பட்டிருந்தாள்.


அடுத்த நிகழ்ச்சி , சயின்ஸ்  .

மீண்டும் .. DASH… DASH…
இப்போது அற்புதமாக, TRUE OR FALSE கேள்விகள். கேள்வி கேட்கும் முன்னே, மகள் TRUE,FALSE என்று பதில் அளித்துக்கொண்டே போகிறாள். இம்முறை , தாயிடம் இருந்து பாராட்டு….VERY GOOD.

பின்னர் ,ANSWER IN ONE WORD. GIVE SHORT ANSWER. ANSWER IN DETAIL என்று வரிசையாக மல்யுத்தம் தொடர்ந்தது.

இந்த"சித்தார்த்த பாசு" quiz program முடிந்தது, ஒரு வழியாக மகள் விடுதலை ஆனாள்.

மெல்ல மகளிடம் கேட்டேன் ...

ஏய்ய் ..செய்யுள் என்றால் என்ன?”

மகள் சொன்னாள்.

-"அதெல்லாம் portion -ல கெடயாது.

அட ராமா !

*************************

3 comments:

  1. Superp comedy... but it is true

    ReplyDelete
  2. தொடர்ந்து எழுதுங்கள் சார்.

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுதுங்கள் சார்.

    ReplyDelete