Oct 27, 2013

Q

இந்த உலகில்  எதற்குத்தான் Queue இல்லை?

பத்துமாதம் அம்மா வயிற்றில் காத்திருந்து வெளியில் வந்தால், கடைசி வரை  மனிதன் ஏதாவது ஒரு விஷயத்துக்கு காத்துக்கொண்டேதான் இருக்கவேண்டியுள்ளது. ரேஷனா, லைசென்சா, பாஸ்போர்ட்டா, ட்ரெயின்டிக்கட்டா,ஏர்போர்ட் செக்-இன்னா,வாக்களிக்கணுமா, ஆதார்கார்டா, தியேட்டரா,காலேஜ் அட்மிஷனா,கக்கூஸா....இப்படி எல்லாத்துக்கும் க்யூ கடைசி வரைக்கும் க்யூ. ச்சே !
காத்திருத்தல் . சிலருக்கு சுகம். பலருக்கு சுமை.
எனக்கு எப்பவுமே இது சுமைதான்.நானும் இன்று ஒரு க்யூவில்தான் நின்று கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் க்யூவில் பல பேர் இருக்கிறார்கள். இந்தியாவின் அத்தனை மக்கள் தொகையும் நான் நிற்கும் வரிசையில் எனக்கு முன்னால்  வருவது ஏன் என்று நான் பலமுறை நினைப்பதுண்டு. என் கால்கள் இரண்டும்  ஏற்கனவே என்னை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டன.எப்படா உக்காருவே ?
க்யூவில் எதைப்பற்றியும் கவலை படாமல் மக்கள் ஆனந்தமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் க்யூவை ரசிப்பவர்கள்.இவர்கள் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இருக்கும். என்னால் இயலாது. ஆத்தாடி  ...எத்தனை பேச்சு ? என்ன உற்சாகம்?
நான் பொதுவாகவே அமைதி விரும்பி. அதுவும் வெளியில் வந்து விட்டால் நான் ஒரு மன்மோகன்சிங் . பேசுவது இல்லை. எனவே,வாயை மூடிக்கொண்டு வரிசையில் அமைதியாக போய்க்கொண்டிருகிறேன். ஆனாலும்,பாழாய்ப்போன என் காது?
க்யூ இப்போது நாலடி நகர்ந்துள்ளது.
 “இந்தவாட்டி மோடிதான் சார் . அத்வானி பாவம்யா .அந்தாள் வரணும்னு நினைக்கிறான்.ஆனா முடியல.மோடி ஒரே அமுக்கு அமுக்கிட்டார் பாத்தீங்களா ?எல்லாம் பாலிடிக்ஸ்
 
க்யூ நகரவில்லை. அரசியலில் ‘பாலிடிக்ஸ்’ செய்யாமல் நியூக்கிளியர் பிசிக்ஸா செய்யமுடியும் ? #சிந்தனை
“என்னத்த அமுக்கினார் ? இந்தவாட்டி ஹங் பார்லிமன்ட்தான் ஒய் ! மன்மோகன் வர்றது கொஞ்சம் கஷ்டம்தான்  
 
க்யூ ஏன் மன்மோகன் சிங் மாதிரி சலனமற்று இருக்கிறது ? #சிந்தனை
அதெல்லாம் இல்ல சார் .அவனவன் வெறுத்து போய் இருக்கான் .திருச்சில கூட்டம் அள்ளுச்சி பாத்தீங்கள்ள...நீங்க வேணா எழுதி வெச்சுக்கங்க ... டேம் ஷூர் இந்த வாட்டி ...”
 
க்யூ மோடி புண்ணியத்தில் இப்போதுதான் உயிர் பெற்று நகர ஆரம்பித்துள்ளது.
“ஜீவிதா  அவங்க அப்பாவுக்கு  எப்பவும் மோர் கொழம்புதான் பிடிக்கும்”
“எங்க வீட்டில எப்பவும் ரசம்தான்
 
எங்க வீட்டில விசம்தான்... கொஞ்சம் பேசாமல் இருப்பீர்களா?
“டீ ...பத்மா திரும்பி அவங்க வீட்டுக்கு போய்ட்டாளாமா ?? பாவம்..அவ புருஷன் பொல்லாதவனாண்டி..நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்னு பாடா படுத்தறானாம்”
இவளுக்கும் கொஞ்சம் வாய் ஜாஸ்தி.பதிலுக்கு பதில் பேசியிருப்பா...இல்லேன்னா இவ்ளோ பெரிய சண்டை வந்திருக்காது .கொஞ்சம் அனுசரிச்சு  போகணும்டி “
 
இந்த க்யூ பத்மா மாதிரி அனுசரிச்சு போக மறுக்கிறதே..
“என்ன மாமா ..ஆபீஸ் லீவா? கொடுத்து வெச்சவன்டா..நெனச்சா லீவு போடறே “
“ஆமாம்..உனக்கென்ன தெரியும் நாளைக்கு போனா எல்லா வேலையும் என் தலையில்தான் விழும்.
 
உன் வேலை உன் தலையில் விழாமல் நெல்சன் மண்டேலா தலையிலா விழும்? ரொம்ப நேரம் ‘க்யூ’வில் நின்றால் ‘ஐக்யூ’ கம்மி ஆகுமோ ? #சிந்தனை
“இந்த புடவை எங்க எடுத்தது?”
 
பக்கத்து வீட்டு கொடியில ...கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா?
“சென்னை சில்க்...போச்சம்பள்ளி ..நல்லா இருக்கா ?”
நாங்க இன்னும் தீபாவளிக்கு துணி எடுக்கல...மாம்பலத்தில எங்க போனாலும் கும்பல்தான் “
 
க்யூ வேகமாக நகர்ந்து ,இப்போது தீபாவளி புடவை வியாபாரம் போல் சூடு பிடிக்கிறது சந்தோசம். மாம்பலம் கும்பல் என்றால் மாமண்டூரில் புடவை எடுங்களேன்?
“டேய் ,விஜய் டிவில நயன்தாரா பேட்டி பாத்தியா ?
நல்லா பேசுராடா..போல்டானா பொண்ணு “
நடுவுல படமே இல்ல...இப்ப திரும்பி சக்க போடு போடுவாங்க போல இருக்கு” 
 
க்யூவில் கால் கடுக்க நிற்கும்போதும் நயன்தாராவை மறக்காத மறத்தமிழன் இவன்.
“நல்லாத்தான் போய்ட்டு இருந்துது BHEL கம்பனி ...இப்போ ஆர்டர் இல்ல. நான் ஷேர் வாங்கும்போது முன்னூறு ரூபா சார்...இன்னிக்கு நூறுல போறான்”
“கேபிடல் செக்டார் வேணாம் சார் . இன்போசிஸ்’ல போடுங்கசார் ...IT Field’ல நல்ல ரிடர்ன் இருக்கும்”
எலெக்ஷன் வரைக்கும் சென்செக்ஸ் நகராது சார் “
 
எனக்கு IT Field–ம் வேண்டாம்.. Paddy Field-ம் வேண்டாம். சென்செக்ஸ் நகராவிட்டால் பரவாயில்லை.க்யூ இப்போது மெதுவாக  நகர்கிறது. இது போதும் எனக்கு.
பேச்சு மட்டும் ஓயவே இல்லை.
 
 “கடைசி ஓவருக்கு முன் ஓவர்  அடிச்சான் பாரு அந்த ஆஸ்ட்ரேலியா க்காரன் ..ஆறு பால்’ல முப்பது ரன்... இனிமே இஷாந்த் ஷர்மாவ  டீம்ல சேத்துருக்கவே கூடாது  . பாலா போடுறான்? 
 
“நல்ல படம் ..ஆனா ,க்ளைமேக்ஸ் சொதப்பிட்டான்பா “
 
க்யூ கூட இப்போது க்ளைமேக்சுக்கு  வந்து விட்டது.
 
“இங்க ஹோட்டல் எதுவும் நல்லா இருக்காது. உடனே கெளம்பிடலாம்”
க்யூ இப்போது முடிவுக்கு  வந்து விட்டது.
இதோ, என் டர்ன்.
ஒ மை காட் !!  
கூரையை பிய்த்தது சத்தம்.
“ஏடு கொண்டலவாடா வேங்கட்ட ரமணா ...கோயிந்தா கோயிந்தா ...
ஜரகண்டி !!! ஜரகண்டி !!!

No comments:

Post a Comment